Saturday, 20 April 2013

தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் காலமானார்

"தினத்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தனார், சென்னையில், நேற்று இரவு, காலமானார். அவருக்கு வயது, 76.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் பல நகரங்களில் இருந்து வெளியாகும், "தினத்தந்தி' நாளிதழின் நிறுவனர், சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனாரின் மகன், சிவந்தி ஆதித்தனார். கல்வியாளர், தொழிலதிபர், ஆன்மிகவாதி, விளையாட்டு ஆர்வலர் என, பன்முக அடையாளம் கொண்டவர். இவருக்கு, மத்திய அரசு, 2008ம் ஆண்டு, "பத்மஸ்ரீ' விருது அளித்து கவுரவித்தது.

சிவந்தி ஆதித்தனாரின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள, காயாமொழி கிராமம்.தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணி முத்து, கோகுலம் கதிர், தினத்தந்தி டிவி, எம்என் டிவி, ஹலோ எப்.எம்., ஆகிய ஊடகங்களை அவர் நிர்வகித்து வந்தார். கடந்த சில வாரங்களாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த சிவந்தி ஆதித்தனார், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை குறித்து அறிந்த, முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று விசாரித்தார். இந்த நிலையில், சிவந்தி ஆதித்தனார், நேற்று இரவு, 8:15 மணிக்கு காலமானார்.

சிவந்தி ஆதித்தனார் உடல், நேற்று இரவு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவர் வீட்டிற்கு, கொண்டு செல்லப்பட்டது. இன்று, பொது மக்கள் அஞ்சலிக்காக, அவரது உடல் வைக்கப்படும். இன்று மாலை, சென்னை, பெசன்ட் நகர் மயானத்தில், இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. நேற்று இரவு, சிவந்தி ஆதித்தனார் காலமான தகவல் வெளியானது முதல், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள், அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பன்முக திறமையில் பளிச்சிட்ட சிவந்தி ஆதித்தனார் : கல்வியாளர், தொழிலதிபர், பத்திரிகையாளர், விளையாட்டு நிர்வாகி என, பல திறமைகள் கொண்டவராக விளங்கியவர் சிவந்தி ஆதித்தனார். 

ஊடக துறையில்...:

பிரசிடென்சி கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த ஆதித்தனார், அவரது தந்தை தொடங்கிய, "தினத்தந்தி' நாளிதழை, தன் சீர்மிகு தலைமையில், சிறப்பாக வளர்த்தார்.மதுரையில் தொடங்கப்பட்ட தினத்தந்தி நாளிதழ், தற்போது, 15 பதிப்புகளோடு இயங்குகிறது. தினத்தந்தி தவிர, மாலைமலர் நாளேடு, தந்தி டிவி, ஹலோ எப்.எம்., ஆகிய ஊடகங்களை நிர்வகித்து வந்தார்.

கல்வி துறையில்...:

ஆதித்தனார் கல்வி நிறுவன அறக்கட்டளை திருச்செந்தூரில் இயங்கி வருகிறது. கிராமப்புற, பின்தங்கிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கோடு ஏற்படுத்தப்பட்ட இந்த அறக்கட்டளையில், தற்போது 7 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த கல்வி நிறுவனங்களுக்கு சிவந்தி ஆதித்தனார் தலைவராக இருந்தார். இவரது பன்முகத்தன்மை மற்றும் ஆளுமை தன்மையால், கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தார்.தமிழகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் கல்வி பங்களிப்பு, போற்றத்தக்கது. இந்த கல்வி நிறுவனங்களில் தற்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்வி துறையில் அவரது முன் உதாரணமான சேவையை பாராட்டி, 2008ல் இந்திய அரசு, அவருக்கு, பத்மஸ்ரீ விருதை வழங்கியது.மேலும், இவரது கல்வி சேவையை பாராட்டி, 1993ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலை, 1994ல் அண்ணாமலை பல்கலை, 2004ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, 2007ல் சென்னை பல்கலை, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.மதுரை காமராஜ் பல்கலை, அண்ணாமலை பல்கலை, பாரதிதாசன் பல்கலை மற்றும் சென்னை பல்கலையில், சிண்டிகேட் உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.

விளையாட்டு துறையில்...:

சிவந்தி ஆதித்தனார் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். 10 ஆண்டுகள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்துள்ளார். பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பொறுப்பாளராக இருந்தார். கடந்த 1989ம் ஆண்டு, சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு, வாலிபாலுக்கு இவரது சேவையை பாராட்டி தங்க பதக்கம் வழங்கியது. மேலும், விளையாட்டு துறையில், இவரது சேவையை பாராட்டி, "ஒலிம்பிக் ஆர்டர் பார் மெரிட்' என்ற, விருதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது.

வகித்த பதவிகள் :

* தலைவர், இயக்குனர், தினத்தந்தி, மாலைமலர்
* இயக்குனர், துணை தலைவர், சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு
* வாழ்நாள் தலைவர், இந்திய ஒலிம்பிக் சங்கம்
* செயல் துணை தலைவர், ஆசிய வாலிபால் கூட்டமைப்பு
* தலைவர், இந்திய வாலிபால் கூட்டமைப்பு
* தலைவர், சென்னை பல்கலைக்கழக விளையாட்டு குழு
* உறுப்பினர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை.

முதல்வர் ஜெயலலிதா இரங்கல் :

"தினத்தந்தி அதிபர், சிவந்தி ஆதித்தனார் மறைவு, பத்திரிகைத்துறை மற்றும் விளையாட்டுத்துறைக்கு பேரிழப்பு' என, முதல்வர், ஜெயலலிதா இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர், ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "தினத்தந்தி' நாளிதழின் அதிபர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்."தினத்தந்தி' நாளிதழ் மூலம் தமிழகத்தில் பாமரரும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் சிவந்தி ஆதித்தனார். இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார். இவர் எனது முந்தைய ஆட்சிகாலத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக திறம்பட பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவர், "பத்மஸ்ரீ' விருது உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரர்.எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான சிவந்தி ஆதித்தனார் மறைவு, பத்திரிகைத்துறை மற்றும் விளையாட்டு துறைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். சிவந்தி ஆதித்தனாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றமும், சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

பத்திரிகை துறைக்கு பேரிழப்பு: "தினமலர்' ஆசிரியர், வெளியீட்டாளர் :

"தினத்தந்தி' அதிபர் பா.சிவந்தி ஆதித்தனார் மறைவு, தமிழ் பத்திரிகை துறைக்கு மிகப்பெரிய பேரிழப்பு என, "தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெளியீட்டாளர் டாக்டர் இரா.லட்சுமிபதி இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளனர். "சிவந்தி ஆதித்தனாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், "தினத்தந்தி' ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்' என, குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment