Friday, 19 April 2013

பான் கார்டை ஆதாரமாக ஏற்க தேர்தல் ஆணையம் முடிவு


வாக்காளராக பதிவு செய்யும்போது, பிறந்த தேதிக்கான ஆதாரமாக, "பான் கார்டை' ஏற்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்காளராக பதிவு செய்து கொள்ள, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். வாக்காளராக பதிவு செய்து கொள்ளும் போது, வயது குறித்து, விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. 

இருப்பினும், 18 வயது முதல், 21 வயதுக்குட்பட்டவர்கள் வாக்காளராக பதிவு செய்யும்போது, வயதுக்கான ஆதாரத்தை நிரூபிக்கும் வகையில், பிறந்த தேதி குறிப்பிடப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.இதில், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், "ஆதார்' கடிதம் ஆகியவற்றை தகுதியான ஆதாரமாக ஏற்றுக் கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, அரியானா மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் வால்கத் கூறியதாவது:பிறந்த தேதியை நிரூபிப்பதற்காக, வாக்காளராக பதிவு செய்து கொள்பவர், நகராட்சி, மாநகராட்சி அல்லது மாவட்ட நிர்வாகம் கொடுத்த பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்தால் போதுமானது.

இது இல்லாத பட்சத்தில், பிறந்த தேதிக்காக அளிக்கப்பட வேண்டிய ஆவணங்களில் சிலவற்றை, ஆணையம் சேர்த்துள்ளது.விண்ணப்பதாரரின் வயது குறித்து, பெற்றோர் அளிக்கும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அது தவிர, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான, மதிப்பெண் சான்றிதழில், பிறந்த தேதி குறிப்பிட்டு இருந்தால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படும்.பெற்றோர் இல்லாத பட்சத்தில், விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு படிக்காத பட்சத்தில், கடைசியாக அவர் படித்த பள்ளியில், பிறந்த தேதி குறிப்பிடப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை அளிக்கலாம் அல்லது கிராம பஞ்சாயத்து தலைவர், நகராட்சி உறுப்பினர் கையெழுத்திட்ட சான்றிதழ்கள் ஏற்கப்படும்.இது தவிர, பாஸ்போர்ட் இருந்தால், பிறந்த தேதிக்கான ஆதாரமாக சமர்ப்பிக்கலாம். இவற்றுடன், பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கடிதம் ஆகியவையும் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment