Saturday, 27 April 2013

நீலகிரியில் புதிய நீர் மின் திட்டத்தால் கோவை, திருப்பூர், ஈரோடுக்கு பயன்


நீலகிரியில், "புதிய நீர் மின் நிலையம் அமைக்கப்படும்' என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது; அதே நேரம், "பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்ட பல நீர்மின் திட்டங்கள் கிடப்பில் உள்ள நிலையில், புதிய திட்டம் எந்தளவுக்கு சாத்தியமாகும்' என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, சிங்காரா, மாயார் உட்பட பல இடங்களில் உள்ள 12 நீர் மின் நிலையங்கள் மூலம், மாதம் 833.62 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மாவட்ட மக்களின் தேவைப்போக, ஈரோடு மின்பகிர்மான வட்டத்தை மையாக வைத்து, மாநிலம் முழுவதும், மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. மின் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின் வெட்டு இருந்து வருகிறது. மாறாக, நீலகிரியில் மின் வெட்டு என்பது இல்லை. பராமரிப்பு பணிகளின் போது மட்டும் மின்தடை ஏற்படுகிறது.


புதிய மின் திட்டம்: இந்நிலையில், நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே சில்லஹல்லா நீர் தேக்கத்தை மையமாக வைத்து, புதிய நீர் மின் நிலையம் அமைக்கப்படும், என மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, மஞ்சூர் அருகே, எடக்காடு - தங்காடு இடைப்பட்ட சில்லஹல்லா நீர் தேக்கத்தை மையமாக வைத்து, 7,000 கோடி ரூபாய் மதிப்பில், 2,000 மெகா வாட் மின்சாரத்தை தயாரிக்கும் வகையில் நீர் மின் நிலையம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வந்தால், நீலகிரியின் மிக அதிகளவு மின் உற்பத்தி செய்யப்படும் நீர் மின் நிலையமாக இது இருக்கும்; தவிர, மாநிலத்தின் மின் தேவையில் பெருமளவு பூர்த்தியாகும். அதே நேரத்தில் கடந்த 20 ஆண்டுக்கு முன், நீலகிரி மாவட்டத்தில் குந்தா, குன்னூர், கூடலூர் உட்பட 13 இடங்களில், 1,650 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க கூடிய நீர் மின் நிலையங்களை அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, திட்டம் தயாரிக்கப்பட்டது. கடந்த 2007ல், குந்தா காட்டுக்குப்பை பகுதியில், 1,500 கோடி ரூபாய் செலவில், 1,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க கூடிய அளவில், மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது; இத்திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், மாநில முதல்வர் அறிவித்துள்ள புதிய திட்டம், எந்தளவுக்கு சாத்தியமாகப் போகிறது, என்ற கேள்வி மின் வாரிய வட்டாரங்களில் எழுந்துள்ளது.


கோவை, திருப்பூருக்கு அதிக பயன்: சில்லஹல்லா நீர் மின் நிலையம் நடைமுறைக்கு வந்தால், நீலகிரி தவிர, கோவை, ஈரோடு மாவட்டங்களின் மின் தேவையில் பெருமளவு பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ""முதல்வரின் அறிவிப்புப் படி, இத்திட்டம் முடிய 8 - 10 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எந்தளவு, மின் வினியோகம் செய்யப்படும், எனக் கூற முடியாது. அந்தந்த காலத்திற்கேற்ப, மின் வினியோகம் இருக்கும். எனினும், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு இத்திட்டத்தால் பெரும் பயன் கிடைக்கும். 

No comments:

Post a Comment