Friday, 19 April 2013

ஆப்ரிக்க நாடுகளுக்கு இடம்பெயரும் ஒசூர் விவசாயிகள்


கொய்மலர் உற்பத்தியில் திருப்பம்

ஆப்ரிக்க நாடுகளில், குறைந்த விலைக்கு விவசாய நிலம் கிடைப்பதால், ஓசூர் மலர் பண்ணை விவசாயிகள், அங்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ஆண்டு முழுவதும், 5 ஆயிரம் ஹெக்டேரில் ரோஜா, ஜெர்பரா, கார்னேஷன், ஆஸ்டர் உள்ளிட்ட, 25 வகை கொய்மலர்கள் உற்பத்தியாகின்றன.குறிப்பாக, 5,000 ஏக்கரில், திறந்தவெளி மற்றும் உயர் தொழில்நுட்ப பசுமை கிடங்கு முறையில், விவசாயிகள், ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
தொழில்நுட்பம்:ஓசூர், பேரிகை, பாகலூர், பேளகொண்டப்பள்ளி, தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலம் பகுதியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மலர் பண்ணைகளில், உயர் தொழில்நுட்பத்தில் உற்பத்தி யாகும் ரோஜா மலர்கள், ஐரோப்பா, அரேபியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.பருவ மழை குறைந்துள்ளதால் இந்த பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது. ஆழ்துளை கிணறுகள் வறண்டதால், ரோஜா செடிகளுக்கு, சொட்டு நீர் பாசனம் செய்ய முடியவில்லை. சர்வதேச சந்தையில், ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு குறைந்தது.
இந்நிலையில், எத்தியோப்பியா, கென்யா, கானா உள்ளிட்ட, ஆப்ரிக்கா நாடுகளில், மலர் சாகுபடிக்கு ஏற்ற சூழல், மிக குறைந்த விலைக்கு விவசாய நிலம், அதிகமான நீர் ஆதாரம், கட்டமைப்பு வசதி, குறைந்த ஊதியத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதால், அங்கு உலக தரம் வாய்ந்த ரோஜா மலர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
உற்பத்தி செலவு:அந்நாடுகளில், ஒரு ரோஜா கொத்துக்கான உற்பத்தி செலவு, 1 ரூபாயில் அடங்கி விடுகிறது. அதனால், சர்வதேச சந்தையில், ஒரு ரோஜா, 5 ரூபாய்க்குவிற்றாலே, 4 ரூபாய் லாபம் கிடைக்கிறது. ஓசூர் பகுதியில், ஒரு ரோஜா கொத்துஉற்பத்தி செய்ய, 3 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை செலவாகிறது.
தற்போது ஓசூர் ரோஜா, 5 ரூபாய், 7 ரூபாய் வரை தான், விற்பனையாகிறது. இவற்றில் கிடைக்கும் லாபம் கூலியாட்கள், மின்சார கட்டணம், போக்குவரத்துக்கு செலவாகி விடுகிறது. அதனால், ஓசூர் மலர் பண்ணை விவசாயிகள், தற்போது ஆப்ரிக்கா நாடுகளில் மலர் பண்ணைகள் அமைத்து, ரோஜா சாகுபடி செய்யஆர்வமாகியுள்ளனர்.
ஓசூர் மலர் விவசாயிகள் கூறியதாவது;எத்தியோப்பியா, கென்யா, கானாஉள்ளிட்ட, ஆப்ரிக்கா நாடுகளில் ஒருஏக்கர் நிலம், 3,000 ஆயிரம் ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை கிடைக்கிறது. அரசே, புறம்போக்கு நிலத்தை, 99 ஆண்டு,குத்தகைக்கு தருகிறது.
மானிய உதவி:மலர் சாகுபடிக்கு தேவையானகட்டமைப்பு வசதி, மானிய உதவிகளை,வங்கிகள் செய்து கொடுக்கின்றன.தோட்டங்களில் வேலை செய்ய, நாளொன்றுக்கு, 25 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்கின்றனர்.அதனால், அந்நாடுகளில் பூக்கள் உற்பத்தி செலவு மிக குறைவு. அதனால், ஆப்ரிக்க நாடுகளில், ஓசூர் மலர் பண்ணை விவசாயிகள், விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
உலக மலர் உற்பத்தியில் இந்திய ரோஜா 2 சதவீதம்கடந்த காலத்தில் இந்தியாவில், கொய்மலர்கள் சாகுபடி அதிகளவு நடந்தது. பருவநிலை மாற்றம், உற்பத்தி செலவு அதிகரிப்பால், கொய்மலர்சாகுபடி குறைந்தது.கடந்த, 2006ம் ஆண்டு இந்தியாவில் இருந்து, 750 கோடி கொய்மலர்கள்ஏற்றுமதியாயின. கடந்த, 2011ம் ஆண்டு கொய்மலர்கள் ஏற்றுமதி, 286 கோடியாக வீழ்ச்சியடைந்தது. தற்போது, உலக ரோஜா ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு, 2 சதவீதமாக உள்ளது. சீன ரோஜா வருகையால், இது மேலும் குறைய வாய்ப்புள்ளது.
ரோஜா விவசாயத்தை மேம்படுத்தவும், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததால், ரோஜா சாகுபடியில், இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment