லோக்சபா தேர்தலில், மக்கள் சிரமமின்றி ஓட்டளிக்க வசதியாக, வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஓட்டு சாவடிகளை அமைக்கும் பணியை, தேர்தல் கமிஷன் துவங்கி உள்ளது.
தமிழகம் முழுவதும், கடந்தாண்டு இறுதியில், வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி, புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஜனவரி, 10 ம்தேதி, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. புதிதாக, 11.8 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
இவர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான, ஜன. 25 ம்தேதி, புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகவரி மாற்றம், இறப்பு, ஒரே பெயர் இருமுறை பதிவு உள்ளிட்ட காரணங்களால், 10.59 லட்சம் வாக்காளர்களின் பெயர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில், 5 கோடியே, 15 லட்சத்து, 69 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2 கோடியே, 57 லட்சத்து, 11 ஆயிரம் பேர், பெண்கள்; 2,433 பேர், திருநங்கைகள். இவர்கள் ஓட்டளிக்க, தமிழகத்தில் , 39 லோக்சபா தொகுதிகளில், 58 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் உள்ளன. அதிகபட்சமாக சென்னையில், 3,000க்கும் மேற்பட்ட ஓட்டுச் சாவடிகள் உள்ளன. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில், 2,000க்கும் அதிகமான ஓட்டுச் சாவடிகள் உள்ளன. ஆனால், மற்ற மாவட்டங்களில் அதற்கும் குறைவாகவே, ஓட்டுச் சாவடிகள் உள்ளன.
இதனால், ஓட்டுச் சாவடிகளில், வாக்காளர்கள் ஓட்டளிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கூட்டநெரிசல் ஏற்படுவதால், நோயாளிகள், முதியோர், பெண்கள், நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால், நகரங்களில் இருப்பவர்கள் மட்டுமின்றி, கிராமங்களில் உள்ளவர்களும், ஓட்டுச் சாவடிகளுக்கு செல்ல தயங்குகின்றனர்.
இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தமிழக தலைமை தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாட்டை செய்தது. நகர்புறங்களில், 1,400 வாக்காளர்களுக்கும், ஊரகப் பகுதிகளில், 1,200 வாக்காளர்களுக்கும் ஓர் ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டது. அதன்படி முன்பு இருந்த, 54 ஆயிரத்து, 16 ஓட்டுச் சாவடிகள், சட்டசபை தேர்தல் நேரத்தில், 58 ஆயிரத்து, 761 ஓட்டுச் சாவடிகளாக அதிகரிக்கப்பட்டது.
இது, பெரும் வரவேற்பை பெற்றது; ஓட்டுப் பதிவும் மிகுந்த விறுவிறுப்பாக நடந்தது. அடுத்தாண்டு மே மாதத்துடன், மத்திய அரசின் பதவிக் காலம் முடிகிறது. அதற்கு முன்பாகவே, தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதற்கேற்ற வகையில், தேர்தலில் புதிய யுக்திகளை புகுத்தும் பணியை, தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் இருந்ததைவிட, வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஓட்டுசாவடிகள் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது: வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில், ஓட்டுசாவடிகளை அமைத்தால், மக்களுக்கு மட்டுமல்லாமல், தேர்தல் அலுவலர்களுக்கும் வசதியாக இருக்கும். கடந்த சட்டசபை தேர்தலில் இருந்ததைவிட, லோக்சபா தேர்தலின் போது, 10 சதவீத ஓட்டுச் சாவடிகள் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
வாக்காளர்கள் ஓட்டு போட , நீண்ட தூரம் நடந்து செல்வதை தடுக்கும் விதமாக, அவர்கள் வசிப்பிடங்களுக்கு குறைந்த தூரத்திலேயே, ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment