Saturday 31 August 2013

திருக்குற்றாலக் குறவஞ்சி


திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. 

தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.
குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்). திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.

குறவஞ்சி நாடகத்திற்கென வரையறை செய்யப்பட்ட கதை அமைப்போடே இந்நூலும் விளங்குகிறது. குற்றாலநாதரின் திருவுலா எழுச்சியைக் குறித்து முன்னரே கட்டியங்காரன் கூறுகிறான். திருவுலா தொடங்குகிறது மூவர் தமிழும் நான்மறைகள் முழங்க குற்றலாநாதர் வீதியில் உலா வருகிறார். குற்றாலநாதாரின் திருவுலாவைக் காண பெண்கள் எழுந்து வருகின்றனர். அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லி (கதைத்தலைவி) என்பவளும் திருவுலாக்காண வருகிறாள். தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல்கொண்டு தோழியைத் தூதனுப்புகிறாள். இந்நிலையில் குறிசொல்லும் குறத்தி தெருவழியே வருகிறாள். தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன் குறப்பெண் தன்நாட்டு மலைவளமும் தொழில்வளமும் சிறப்பாக எடுத்துக்கூறுகிறாள். பின் வசந்தவல்லி கையைப் பார்த்து அவள் குற்றாலநாதர் மீது காதல் கொண்டுள்ள செய்தியையும், (தலைவனின்) குற்றாலநாதரின் புகழ்பற்றியும் எடுத்துச்சொல்லி வசந்தவல்லியின் எண்ணம் நிறைவேறும் என்று குறி சொல்லி பாpச பெறுகிறாள் குறத்தி சிங்கி. அவள் கணவன் சிங்கன் அவளைக் காணத் தேடிவருகிறான். குறத்தியைக் கண்ட சிங்கனிடம் குறத்தி நடந்ததைச் சொல்ல இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர். இவ்வாறு கதை முடிகிறது.

குறவஞ்சி நூல்களுள் பாராட்டுக்குரியதாக விளங்கி வருவதும், இன்றும் நாட்டிய நாடகமாக மேடைகளில் நடிக்கப்பட்டு வருவதும், இக்குற்றாலக் குறவஞ்சி ஆகும். திரிகூடராசப்பக்கவிராயர் குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமகஅந்தாதி முதலிய நூல்களை இயற்றியிருந்தாலும் இன்று பலரும் விரும்பிப் படிப்பது அவருடைய குறவஞ்சி ஒன்றே. குற்றாலக்குறவஞ்சியானது இறைவன்மீது பாடப்பெற்றதால் திருக்குற்றலாக்குறவஞ்சி எனும் பெயர் பெற்றது. நாடகச்சுவை நிரம்பிய இந்நூல் சந்த (ஓசை) நயத்தோடு கூடிய பாடல்களையும் கற்பனை நயம் கொண்ட பாடல்களையும் நிரம்பப் பெற்றுள்ளது. சான்றாக வசந்தவல்லி பந்தாடும் பாங்கைப்பற்றி எடுத்துரைக்கும்,

செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம் செயம் என்றாட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாடஇரு
கொங்கை கொடும்பகைவென்றனம் என்று
குழைந்து குழைந்தாடமலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த
சவுந்தார் பந்து பயின்றனளே

என்ற பாடலைக் கூறலாம். இதைப்போல் சந்தநயம் கொண்ட இன்னும் பலபாடல்கள் இந்நூலாசிரியரால் இயற்றப்பட்டுள்ளன.

குற்றாலக் குறவஞ்சியில் தமிழகத்தின் காட்டு விலங்குகளைப் பற்றியும் செடியினங்களைப் பற்றியும் மிகப்பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment