Saturday 3 August 2013

உதவி பேராசிரியர் நியமனம் : பணி அனுபவ கணக்கீட்டை அறிவித்தது டி.ஆர்.பி.


பணி அனுபவ கணக்கீட்டால், உதவி பேராசிரியர் நியமனத்தில், இரு மாதங்களாக நிலவி வந்த சர்ச்சை, டி.ஆர்.பி.,யின் அறிவிப்பால் முடிவுக்கு வந்துள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடம் டி.ஆர்.பி., மூலம், நிரப்பப்படுகிறது. இதற்காக, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ள தகுதிகளில், முதுகலை பட்டத்தில், 55 சதவீதம் மதிப்பெண்ணுடன், மாநில அளவிலான தகுதித் தேர்வு (ஸ்லெட்) அல்லது தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவை தவிர, எம்.பில்., - பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களும் தகுதியுடையவர் என, டி.ஆர்.பி., அறிவித்திருந்தது. தகுதி அடிப்படையில் நடக்கும் இத்தேர்வுக்கு, அரசு நிர்ணயித்துள்ள மதிப்பெண், 34. இதில், பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக, 15 மதிப்பெண் வழங்கப்படுகிறது. "ஆசிரியரின் பணி அனுபவம் என்பது, "நெட், ஸ்லெட்' அல்லது பிஎச்.டி., தகுதி பெற்ற நாளிலிருந்து, ஆசிரியராக பணியாற்றுவதே, கணக்கில் எடுத்து கொள்ளப்படும்' என, டி.ஆர்.பி., தெரிவித்தது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆசிரியர் பணி அனுபவத்துக்கு, "ஸ்லெட், நெட்' போன்ற தகுதித் தேர்வை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும், ஏற்கனவே உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. பணி அனுபவம் குறித்து, தெளிவாக முடிவை வெளியிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை, விசாரித்த ஐகோர்ட், "பல்கலைக் கழக மானியக் குழு விதிமுறைப்படி, பணி நியமனத்துக்கு, கடைப்பிடிக்கப்பட்ட கல்வி தகுதியைக் கொண்டே, பணி அனுபவத்தை கணக்கிட வேண்டும்' என தீர்ப்பளித்தது. சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு பின்பும், பணி அனுபவத்தைக் கணக்கிடுவது குறித்து, டி.ஆர்.பி., தெளிவுபடுத்தவில்லை. எந்த முறையில், பணி அனுபவத்தை கணக்கிட வேண்டும் என, டி.ஆர்.பி., அறிவிக்காததால், பணி அனுபவ ஆணை பெற முடியாமல், ஆசிரியர்கள் பரிதவித்தனர். இதையடுத்து, ஆசிரியர் ஒருவர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், விண்ணப்பம் அனுப்பும் கடைசி தேதியை, ஆக., 12ம் தேதி வரை நீடித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்த நீண்ட பிரச்னைக்கு முடிவு காணும் வகையில், பணி அனுபவ கணக்கீட்டு முறையை, டி.ஆர்.பி., நேற்று அறிவித்துள்ளது. அதில், பணி அனுபவ கணக்கிடுவது பற்றி கூறியிருப்பதாவது: கீழ்கண்ட தேதிகளில், குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியுடன், கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுபவர்களின், பணி அனுபவம் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். முதுகலை பட்ட படிப்பில், 50 சதவீத மதிப்பெண்களுடன், 1991ம் ஆண்டு முன் தேர்ச்சி பெற்றவர்கள்; 1991, செப்., 19ம் தேதிக்கு முன், "நெட், ஸ்லெட்'டுடன், முதுகலையில், 55 மதிப்பெண் பெற்றவர்கள்; 1993, டிச., 31ம் தேதிக்கு முன் எம்.பில்., முடித்தவர்கள், பிஎச்.டி., சமர்ப்பித்தவர்கள்; 2002, டிச., 31ம் தேதிக்கு முன், பி.எல்., முடித்துவிட்டு, இளங்கலை மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தவர்கள் - பிஎச்.டி., முடித்து விட்டு, முதுகலை மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தவர்கள்; 2010, ஜூலை 30ம் தேதிக்கு முன், பிஎச்.டி., முடித்தவர்கள் ஆகியோரது, பணி அனுபவம், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

No comments:

Post a Comment