Saturday 17 August 2013

குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்

நேர்முகத்தேர்வுடன் கூடிய 1,059 சார்நிலை பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்–2 தேர்வுக்கு அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

குருப்–1 மெயின் தேர்வு

துணை கலெக்டர், டி.எஸ்.பி. வணிகவரி உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 16–ந்தேதி முதல்நிலைத்தேர்வை நடத்தினோம். இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு மே மாதம் 16–ந்தேதி வெளியிடப்பட்டது.அடுத்த கட்ட தேர்வான மெயின் எழுத்துத்தேர்வுக்கு ‘ஒரு காலி இடத்திற்கு 50 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் மொத்தம் 1,391 பேர் தேர்வுசெய்யப்பட்டு உள்ளனர். முதல்நிலைத்தேர்வில் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களையும் மெயின் தேர்வுக்கு அனுமதித்து இருக்கிறோம். இதனால், விகிதாச்சார எண்ணிக்கை சற்று அதிகம் வந்துள்ளது. மெயின் தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் சென்னையில் நடத்தப்பட உள்ளது.

அடுத்த வாரம் அறிவிப்பு

அனைத்து தாள்களும் பொது அறிவு சம்பந்தப்பட்டவை. மெயின் தேர்வு முடிவை எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவாக வெளியிட திட்டமிட்டுள்ளோம். அரசு பணிகளில் ஏற்படும் காலி இடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அதன் பேரில் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.குரூப்–2 தேர்வை பொருத்தவரையில், தற்போது நேர்காணல் பதவிகள் கொண்ட தேர்வு, நேர்காணல் அல்லாத பதவிகளை உள்ளடக்கிய தேர்வு என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் நேர்காணல் பதவிகள் கொண்ட (நகராட்சி கமிஷனர், உதவி வணிகவரி அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, சார்–பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, வருவாய் உதவியாளர் போன்றவை) குரூப்–2 தேர்வின் கீழ் 1,059 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.

ஆன்லைன் தேர்வு முடிவு

அதேபோல், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு இதுவரை 757 காலி இடங்கள் வந்து இருக்கின்றன. இந்த தேர்வுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும். இந்து சமய அறநிலை ஆட்சித்துறை உதவி கமிஷனர், நிர்வாக அதிகாரி (கிரேடு–1) ஆகிய பதவிகளுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார்.பேட்டியின்போது டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment