மரபுத்தொடர் என்பது சொற்றொடராகவும் இருக்கலாம். (எ.டு.) புதுத் தொழிலில் இறங்கிய பிறகு, அவருக்குப் பணம் கூறையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது. (’கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டு’ என்பதுதான் இந்த எடுத்துக்காட்டில் உள்ள மரபுத்தொடர்.) மரபுத்தொடர் குறிப்பிட்ட விதத்திலான சொற்சேர்க்கையாக இருக்கலாம். (எ.டு) வேலை போனதால் இனிமேல் நான் செல்லாக் காசுதான். (இந்தத் தொடரில் உள்ள செல்லாக் காசு என்பது மரபுத்தொடர்)
மரபுத்தொடரில் சொல்லுக்குச் சொல் பொருள்கொள்ள முடியாது. பணம் ‘கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது’ என்றால் உண்மையிலேயே அப்படிக் கொட்டுவதாகப் பொருள்படாது; மிக அதிக அளவில் வருமானம் வந்துகொண்டிருக்கிறது என்றுதான் அதற்குப் பொருள்.
ஒரு உணர்ச்சியையோ தொனியையோ கருத்தையோ குறிப்பிட்ட வகையில் வெளிப்படுத்த மரபுத்தொடர்கள் பயன்படுகின்றன. ‘எனக்கு உதவிசெய்வதாகச் சொல்லிவிட்டுப் பிறகு உதவிசெய்யாமல் போய்விட்டாயே?’ என்று சொல்வதைவிட, ‘என்னை இப்படி நட்டாற்றில் விட்டுவிட்டுப் போய்விட்டாயே?’ என்று சொல்வதுதான் கச்சிதமாகவும் உணர்ச்சியைச் சரியாக வெளிப்படுத்தும் விதத்திலும் இருக்கும். இதுதான் மரபுத்தொடர்களின் வலிமை. சொற்களை அப்படியப்படியே சேர்த்து அவற்றின் அடிப்படைப் பொருள்களை மட்டும் கொண்டு பேசினாலோ எழுதினாலோ உப்புச்சப்பே இல்லாத வகையில்தான் அந்த மொழி இருக்கும். எனவே, மொழியின் ஆழகில், கச்சிதத்தில் மரபுத்தொடர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.
No comments:
Post a Comment