Tuesday 23 April 2013

கள்ளக்குறிச்சி மரச்சிற்பம் உள்ளிட்ட 8 பொருட்களுக்கு புவிசார் குறியீடு


"கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், நாகர்கோவில் கோவில் தேர் உள்ளிட்ட, எட்டு கைவினை பொருட்களுக்கு, புவிசார் குறியீடு பதிவு பெற, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் மோகன் அறிவித்தார்.

ஊரக தொழில் துறை அமைச்சர் மோகன் வெளியிட்ட அறிவிப்புகள்:


பட்டு வளர்ச்சித் துறையின் விரிவாக்கப் பணிகளுக்கு, இளநிலை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களின் பணி முக்கியமானது. இந்த துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில், முதல் கட்டமாக, 100 இளநிலை ஆய்வாளர்களும், 18 உதவி ஆய்வாளர்களும், நேரடி நியமனம் செய்யப்படுவர்.


2013-14ம் ஆண்டில், 3,000 ஏக்கரில், தரமான மற்றும் அதிக விளைச்சல் தரும், மல்பெரி ரகங்களை நடவு செய்யும் விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, 6,750 ரூபாய் வீதம், அதிகபட்சமாக, 2.50 ஏக்கருக்கு, 16 ஆயிரத்து, 875 ரூபாய் வரை, 2 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
1,500 ஏக்கர் பரப்பிலான மல்பெரி தோட்டங்களில், சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, விவசாயிகளுக்கு, 3 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.


பிரபலமான கைவினைப் பொருட்களான சுவாமிமலை- பஞ்சலோக சிலைகள், 
வடசேரி-கோவில் நகைகள், தஞ்சாவூர்-ஓவியங்கள், கலை தட்டுகள், பொம்மைகள் ஆகியவற்றிற்கு, புவிசார் குறியீடு பதிவு பெறப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, நாச்சியார் கோவில்-பித்தளை விளக்குகள், பத்தமடை-பாய்கள், தோடா-சித்திரத் தையல் வேலை ஆகியவற்றுக்கும், புவிசார் குறியீடு பதிவு பெறப்பட்டுள்ளன. நடப்பு நிதி ஆண்டில், நாகர்கோவில்-கோவில் தேர், கள்ளக்குறிச்சி-மரச்சிற்பம் உள்ளிட்ட எட்டு கைவினைப் பொருட்களுக்கு, புவிசார் குறியீடு பதிவு பெற,நடவடிக்கை எடுக்கும்படி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பூம்புகார் நிறுவனம், ஏற்கனவே சிங்கப்பூரில் நடத்திய கண்காட்சி மற்றும் விற்பனை, ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது. எனவே, மலேசியாவில், அதிக தமிழர்கள் வசிப்பதை கருத்தில்கொண்டு, நடப்பு ஆண்டில், கோலாலம்பூரில், 50 லட்சம் ரூபாய் செலவில், கண்காட்சி நடத்தப்படும்.


புவிசார் குறியீடு பதிவுவாங்கப்பட உள்ள பொருட்கள்

1. நாகர்கோவில் தேர் (கன்னியாகுமரி மாவட்டம்)
2. கள்ளக்குறிச்சி மரச்சிற்பம் (விழுப்புரம்)
3. அரும்பாவூர் மரச்சிற்பம் (திருச்சி)
4. கருப்பூர் ஓவியம் (தஞ்சாவூர்)
5. தஞ்சாவூர் கண்ணாடி வேலைப்பாடு
6. தஞ்சாவூர், புதுக்கோட்டை நெட்டி வேலை (நெட்டி என்பது, 
ஒரு வகை தாவரம். இதை பதப்படுத்தி, பரிசுப் பொருட்கள் 
தயாரிக்கப்படுகின்றன.)
7. கன்னியாகுமரி, மயிலாடி கற்சிற்பம் (கன்னியாகுமரி)
8. நாமக்கல், மாக்கல் பொருட்கள் (பணியாரக் கல்)

No comments:

Post a Comment