Thursday 25 April 2013

சூரிய சக்தி மின்சாரம்: ஒரு கிலோவாட்டுக்கு ரூ.20 ஆயிரம் மானியம்


சூரிய சக்தி மூலம் தயாரிக்கப்படும் ஒரு கிலோவாட் மின்சாரத்துக்கு ரூ.20 ஆயிரம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும். மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் கூடுதலாக இந்த ஊக்கத் தொகை அளிக்கப்படும்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை படித்தளித்த அறிக்கை:

தமிழகத்தில் மூன்றாண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி செய்யவும், அதை ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன்.

சூரிய மின் சக்தி சாதனங்களை வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் பொருத்தினால் அவர்களுக்கு மத்திய அரசு 30 சதவீதம் மானியம் வழங்குகிறது. இதனுடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் ஊக்கத் தொகை வழங்கவும் உத்தரவிட்டிருந்தேன். இதன்படி, வீட்டுக் கூரை மின் உற்பத்திச் சாதனங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2-ம், அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.1-ம், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு 50 பைசாவும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தேன்.

இந்த நிலையில் முதலீட்டு மானியம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அல்லது கிலோவாட் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதலீட்டு மானியம் வழங்கப்படும். மேற்கூரையில் சாதனங்களைப் பொருத்தி மின் உற்பத்தி செய்யும் வீட்டு மின் பயன்பாட்டாளர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக 10 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர் பயன்பெறுவர்.

20 ஆயிரம் மின் மாற்றிகள்: தமிழகத்தில் ஏறத்தாழ 2.2 லட்சம் மின்மாற்றிகள் பொருத்தப்பட்டு நுகர்வோர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது. சீரான மின்சாரம் வழங்க பழுதான மின்மாற்றிகளுக்குப் பதிலாக புதிய மின்மாற்றிகள் வாங்குவது அவசியம்.

இதுவரை ஆண்டுக்கு சராசரியாக 10 ஆயிரம் மின்மாற்றிகளுக்கும் குறைவாகவே வாங்கப்பட்டு வந்துள்ளது. பற்றாக்குறை காரணமாக நுகர்வோர்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, ரூ.500 கோடியில் 20 ஆயிரம் புதிய மின் மாற்றிகள் கொள்முதல் செய்யப்படும்.
மேலும் ரூ.850 கோடி செலவில் 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய உயர்வழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் வழித் தடங்கள் அமைக்கப்படும்.

11 லட்சம் புதிய இணைப்புகள்: தமிழகத்தில் இப்போது சுமார் 2.40 கோடி மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தாமதமின்றி உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கும் வகையில் இந்த ஆண்டு வீட்டு மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு, வணிக மின் இணைப்பு, தொழிற்சாலை மின் இணைப்பு போன்ற 11 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment