Tuesday 30 July 2013

டி.என்.பி.எஸ்.சி.,யில் 4 உறுப்பினர் பணியிடம் காலி

டி.என்.பி.எஸ்.சி.,யில், நான்கு உறுப்பினர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பதவிகளை பிடிக்க, இப்போதே, கடும் போட்டி எழுந்துள்ளது. தேர்வாணையத்தில், தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் நியமிக்கப்படுபவர், 62 வயது அல்லது ஆறு ஆண்டு, இதில், எது முதலில் வருகிறதோ, அதுவரை, பதவியில் தொடரலாம். ஒருவர், 56வது வயதில், நியமனம் செய்யப்பட்டால், 62 வயது வரை (ஆறு ஆண்டுகள்), பதவி வகிக்கலாம்; 60 வயதில், நியமனம் பெற்றால், 62 வயதில், பணி நியமனம், முடிவுக்கு வந்துவிடும். அந்த வகையில், இம்மாத துவக்கத்தில், உறுப்பினர்கள் ஷோபினி மற்றும் சேவியர் ஜேசுராஜா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இவர்களைத் தொடர்ந்து, லட்சுமணன் மற்றும் சங்கரலிங்கம் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவடைந்துவிட்டது. 14 உறுப்பினர்களில், நான்கு உறுப்பினர் பதவி, காலியாக உள்ளது. இந்த பதவிகளை பிடிக்க, இப்போதே, கடும் போட்டி எழுந்துள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் பணியில் இருக்கும் அதிகாரிகள் என, பலரும் போட்டி போடுவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முதல்வர் ஜெயலலிதா, தற்போது, கொடநாட்டில் தங்கியபடி, பணிகளை கவனித்து வருகிறார். ஆக., 10ம் தேதிக்குப் பின், முதல்வர், சென்னை திரும்புவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தின விழாவிற்குப் பின், தேர்வாணைய உறுப்பினர் பதவி நிரப்பப்படலாம் என, தெரிகிறது.

No comments:

Post a Comment