Tuesday 30 July 2013

குரூப்-4 தேர்வு: பாதுகாப்பை பலப்படுத்தாவிட்டால் சிக்கல் தான்!

"அடுத்த மாதம், 25ம் தேதி நடக்க உள்ள குரூப் - 4 தேர்வு தொடர்பான பணிகளில், பாதுகாப்பை பலப்படுத்த, தேர்வாணையம் தவறினால், கேள்வித் தாள், "லீக்' ஆகும் அபாயம் எழலாம்' என, பல தரப்பில் இருந்தும், இப்போதே, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சி காலத்தில், டி.என்.பி.எஸ்.சி.,யில், நடந்த பல்வேறு முறைகேடுகள், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், வெளிச்சத்திற்கு வந்தன. இதனால், தேர்வாணையத்தின் மீதான மதிப்பும், நம்பிக்கையும் நிலைகுலைந்துபோனது. இந்நிலையில், ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரியான நடராஜை, தேர்வாணையத்தின் புதிய தலைவராக நியமித்து, முதல்வர் ஜெயலலிதா, நடவடிக்கை எடுத்தார்.இவரின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள், அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவை, அனைவராலும் வரவேற்கப்பட்டன. தேர்வாணைய அலுவலர்கள், ஊழியர்களும், தேர்வு நடவடிக்கைகளில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என, கூறுகின்றனர்.நடராஜ், பதவியில் இருந்தபோது, குரூப் - 4, வி.ஏ.ஓ., போன்ற பெரிய தேர்வுகள் நடக்கும் போது, தேர்வுக்கு முன், விரிவான ஏற்பாடுகளை செய்தார். மண்டல வாரியாக சென்று, மாவட்ட கலெக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். கலெக்டர்களிடம், முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்ததால், அவர்களும், ஆர்வத்துடன், தேர்வு பாதுகாப்பு பணிகளை கவனித்தனர்.அப்படியிருந்தும், குரூப் - 2 தேர்வு கேள்வித்தாள், ஈரோட்டில், "லீக்' ஆகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, கோல்கத்தாவைச் சேர்ந்த அச்சக அதிபர் உட்பட, 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.தேர்வாணையத்தில் பணியாற்றி, பல ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு, கேள்வித்தாள் எங்கே அச்சடிக்கப்படுகிறது, தேர்வுக்கு முன், கேள்வித்தாள் கட்டுகள், எங்கெங்கே பயணமாகிறது என்பது உட்பட அனைத்து விஷயங்களும் நன்றாகத் தெரியும்.

எனவே, குரூப் - 2 தேர்வில் நடந்தது போன்று, மீண்டும் ஒரு சம்பவம் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, தேர்வாணையத்தின் பொறுப்பாக உள்ளது.ஆனால், மண்டல வாரியாக, மாவட்ட கலெக்டர்களுடன், தேர்வாணையம் ஆலோசனை நடத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடும் பணியை இதுவரை செய்யவில்லை என, கூறப்படுகிறது. அச்சகங்களில் இருந்து, கேள்வித்தாள் கட்டுகள், தேர்வு மையங்களுக்கு செல்வது வரை, அனைத்து நிலைகளிலும், கடுமையான கண்காணிப்பும், பாதுகாப்பு நடவடிக்கையையும், தேர்வாணையம் எடுக்க வேண்டும் என, தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர். தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கும்பல்கள், குரூப் - 4 தேர்விலும், கை வரிசையை காட்டலாம் என, கூறப்படுகிறது.கடலூர் மாவட்டம் அருகே, ஒரு குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த கும்பல் தான், இதற்கு முன் நடந்த பல தேர்வுகளின் கேள்வித் தாளை, "லீக்' செய்ததாக, ஏற்கனவே பரவலாக பேசப்பட்டது. எனவே, தேர்வாணையம், உஷாராக செயல்படாவிட்டால், சிக்கல் ஏற்பட்டுவிடும் என்றும், பலரும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எழுதுவோர் எண்ணிக்கை 17.5 லட்சமாக உயர்வு:


அரசின் பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரித் தண்டலர், வரைவாளர் மற்றும் நில அளவர் ஆகிய பணிகளில், காலியாக உள்ள, 5,566 பணியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த, 15ம் தேதி, மாலை, 4:00 மணி நிலவரப்படி, 16.13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அன்றிரவு, 11:59 வரை, இணையதளத்தில் விண்ணப்பிக்க, கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதை பயன்படுத்தி, கூடுதலாக, 1.37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 17.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.தேர்வாணைய, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா கூறுகையில்,""தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நாங்கள், தினமும், கலெக்டர்களுடன் பேசுகிறோம்; அவர்களும் பேசுகின்றனர். தேர்வு நெருக்கத்தின் போது, "வீடியோ கான்பரன்சிங்' மூலமும் பேசி, தேவையான ஏற்பாடுகளைச் செய்வோம்,'' என்றார்.தேர்வுக்கு, இன்னும், 24 நாட்கள் தான் உள்ளன . 


No comments:

Post a Comment