Friday 5 July 2013

தட்டச்சு சான்றிதழ் வழங்க கால தாமதம்: குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க சிக்கல்

தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியாகி, இரு மாதங்களாகியும், இதுவரை சான்றிதழ் வழங்கப்படாததால், தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றும், அதைக் கொண்டு, குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல், பல இளைஞர்கள் தவிக்கின்றனர்.

அரசு துறைகளில் காலியாக உள்ள, 5,566 இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர் ஆகிய பணியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வை, அரசு அறிவித்துள்ளது. 10 வகுப்பு முடித்து, தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றவர், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறைவான கல்வித் தகுதி என்பதால், அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திலேயே, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். கடந்த பிப்ரவரி மாதம், இளநிலை, முதுகலை தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகிய தேர்வுகளை, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவு, ஏப்ரல் மாதத்தில் வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியாகி, இரு வாரங்களில் சான்றிதழ் வழங்கப்படும். ஆனால், இரண்டு மாதங்களாகியும் இதுவரை, தட்டச்சு தேர்வு சான்றிதழை வழங்கவில்லை. சான்றிதழ் இருந்தால் மட்டுமே, குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இம்மாதம், 15ம் தேதி, விண்ணப்பிக்க கடைசி என்பதால், அதற்குள் சான்றிதழ் வருமா என, தெரியாமல் பலர் தவிக்கின்றனர். தட்டச்சு பயிற்சி மையங்கள் சார்பில், உயர்கல்வி துறையிடம் பலமுறை முறையிட்டதில், "வெற்று சான்றிதழ் போதியளவு இருப்பு இல்லை. புதிய சான்றிதழ் அச்சடிக்க தாமதம் ஏற்படுகிறது' என, தெரிவித்துள்ளனர்.

தட்டச்சர் சங்கத்தினர் கூறியதாவது: அரசு நடத்தும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு மற்றும் பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியான, இரு வாரங்களிலேயே சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், தட்டச்சு தேர்வுகளை பொறுத்தவரை, கடந்த நான்காண்டுகளாக, தேர்வு முடிவுகள் வெளியாகி, மூன்று, நான்கு மாதங்கள் கழித்தே சான்றிதழ் வழங்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியாகி, ஓரிரு வாரத்தில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நியதி இருந்தும், அதை, தொழில்நுட்ப கல்வித் துறை கடைபிடிப்பதில்லை. சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல், பரிதவிக்கின்றனர். சான்றிதழை, விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், இந்த தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, கடைசி தேதியை, மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment