கடன் அட்டை நிலுவை செலுத்துவதில் கால தாமத கட்டணம் வசூலிப்பதில் ஒரு மாதம் வரை கால அவகாசம் அளிக்கலாம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடன் அட்டை தவணை செலுத்துவோருக்கு மிகப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
பொதுவாக கடன் அட்டை அறிக்கை (ஸ்டேட்மெண்ட்) அளிக்கும் காலம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். கடன் தொகையில் குறைந்தபட்ச தொகை செலுத்துவதற்கான கால அவகாசமும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்விதம் குறிப்பிட்ட தேதிக்குள் தவணைத் தொகை செலுத்தாவிடில் வங்கிகள் தாமதக் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த அளவானது ரூ. 100 முதல் ரூ. 700 வரை உள்ளது. செலுத்த வேண்டிய தொகை ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் வங்கிகள் ரூ. 700-ஐ தாமதக் கட்டணமாக வசூலிக்கின்றன.
குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு அடுத்த நாளே தவணை தொகை செலுத்தினாலும் இந்த கால தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்விதம் தவணைத் தொகை செலுத்துவதில் 30 நாள்கள் வரை அவகாசம் அளிக்கலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதனால் குறிப்பிட்ட கெடு தேதிக்குள் தவணை செலுத்தாவிடினும், ஒரு மாதத் துக்குள் செலுத்தினால் கால தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது. இப்புதிய உத்தரவு திடீர் செலவுக்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தும் நடுத்தர பிரிவு மக்களுக்கு மிகப் பெரும் நிம்மதியை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கால தாமதக் கட்டணமானது வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது. இது குறைந்த பட்சம் ரூ. 100-லிருந்து ரூ. 700 வரை உள்ளது. பொதுவாக மின்சாரம் மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் குறித்த காலத்துக்குள் தொகையை செலுத்தாவிடில் தாமதக் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் கடன் அட்டை வழங்கிய வங்கிகள் செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டியை வசூலிக்கின்றன. அத்துடன் குறித்த தேதியில் செலுத்தாததற்கு தாமதக் கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கிறது.
குறிப்பிட்ட சில வங்கிகள் மற்றும் கடன் அட்டை அளிக்கும் நிறுவனங்கள் சில சமயங்களில் குறித்த தேதியில் தவணைத் தொகை செலுத்தாவிடில் அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன. வங்கிகள் பல சமயங்களில் இது தொடர்பான அறிவிப்பை முன்னதாகவே வாடிக் கையாளருக்குத் தெரிவித்து விடுகின்றன.
ஆனால் சில தனியார் வங்கிகள் குறித்த தேதியிலிருந்து 10 தினங்களுக்குள் குறைந்தபட்ச தொகையை செலுத்தாவிடில் அட்டையின் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன.
வாடிக்கையாளருக்கு 72 நாள் அவகாசம் தருவதாக கோடக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது. அதற்குப் பிறகே அட்டையின் செயல்பாடு முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளருக்கு 75 நாள் அவகாசம் அளிக்கிறது.
No comments:
Post a Comment