இருபதாம் நூற்றாண்டின் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் அஹமது சல்மான் ருஷ்டி. ஆங்கிலோ இந்திய எழுத்தாளரான அவர் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர், 1947 ஜூன் 19 அன்று பம்பாய் (தற்போது மும்பை) நகரில் பிறந்தார். நடுத்தர வர்க்க இஸ்லாமிய குடும்பம் அவருடையது. அவரது தாத்தா உருதுக் கவிஞர். அவருடைய தந்தை வணிகர். ருஷ்டியின் தந்தை கேம்பிரிட்ஜில் படித்தவர். ருஷ்டியின் 14-ம் வயதில் அவர் இங்கிலாந்துக்குப் பள்ளிப் படிப்புக்காக அனுப்பிவைக்கப்பட்டார். பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே கேம்பிரிட்ஜ் ஃபுட்லைட்ஸ் நாடகக் கம்பனியில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
1964-ல் ஏற்பட்ட இந்திய பாகிஸ் தான் போரின் காரணமாக அவருடைய குடும்பம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு இடம்பெயர்ந்தது. அப்போது அவர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் வரலாறு பாடம் படித்துக்கொண்டிருந்தார். மதரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எழுந்த முரண்பாடுகள் சல்மான் ருஷ்டியை ஆழமாகப் பாதித்தன. 1968-ல் பட்டப் படிப்பை முடித்த பின்னர் பாகிஸ்தானில் உள்ள தொலைக்காட்சியில் பணி செய்தார். அதே நேரத்தில் இங்கிலாந்தின் ஓவல் ஹவுஸ் நாடகக் குழுவினரின் நாடகங்களில் நடிக்கவும் செய்தார்.
12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி பாடலான த கான்ஃபெரன்ஸ் ஆஃப் த பேர்ட்ஸ் பிடித்துப் போனதால் அந்தப் பாதிப்பில் அவர் கிரிமஸ் (Grimus) என்னும் நாவலை எழுதினார். அவரது முதல் நாவலான இது 1975-ல் வெளியிடப்பட்டது. அறிவியல் புனை கதையான இதற்கு விமர்சகர்களிடமிருந்தோ வாசகர்களிடமிருந்தோ பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் 1981–ல் அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசியது. அந்த ஆண்டில் வெளியான அவரது நாவலான ‘மிட்நைட் சில்ட்ரன்’ உலகமெங்கும் பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்திய அரசியலை நையாண்டி செய்து எழுதப்பட்ட இதற்கு புக்கர் பரிசு கிடைத்தது.
1983-ல் அவரது மூன்றாம் நாவலான ‘ஷேம்’ வெளியானது. இது பாகிஸ்தான் அரசியலை உருவகித்து எழுதப்பட்டிருந்தது. 1988-ல் வெளியான அவரது நான்காம் நாவலான ‘த சாத்தானிக் வெர்சஸ்’ பலத்த சர்ச்சைக்காளானது. இஸ்லாமிய வரலாற்றைத் தவறாகச் சித்திரித்திருந்ததாகக் கூறிப் பல நாடுகளில் இந்த நாவல் புறக்கணிக்கப்பட்டது; சில நாடுகளில் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த நாவலைப் பிரசுரித்தவர்கள் தாக்கப்பட்டார்கள்; கொல்லப்பட்டார்கள். 1989-ம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று பிபிசி செய்தியாளர் ஒருவர் ருஷ்டிக்கு போன் செய்தார். ஈரானின் மதத் தலைவர் ஆயதுல்லா கொமானி சல்மான் ருஷ்டிக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளதைக் கூறினார்.
இதையெல்லாம் மீறியும் அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். இதுவரை பதினோரு நாவல்களைப் படைத்துள்ளார். இவரது புத்தகங்கள் சுமார் 40 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment