தனக்குப் பிறந்த பெண் குழந்தையைக் கொன்ற இளம்பெண்ணின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உலகில் வேறு எங்குமே இல்லாத வகையில் தருமபுரி, மதுரை மாவட்டங்களில்தான் பெண் சிசுக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகின்றன என்று நீதிபதி பி.தேவதாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் மரியம்பட்டி கிராமத்தில் தனக்குப் பிறந்த பெண் குழந்தையை ஓர் இளம்பெண் கொன்றுவிட்டார். போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.தேவதாஸ், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். உத்தரவில் அவர் கூறியுள்ளதாவது:
மனுதாரர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். பெண்ணாகப் பிறந்ததைத் தவிர அந்த சிசு வேறு எந்த பாவமும் செய்யவில்லை. இதுபோன்ற பெண் சிசுக்களை கொலை செய்யும் சம்பவங்கள் தருமபுரி மாவட்டத்தில்தான் அதிகம் நடக்கின்றன. தருமபுரி மாவட்ட மக்கள் பெண் குழந்தையை விரும்புவதே இல்லை என்பது போன்ற தோற்றத்தையே இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன.
சாதித்த ‘கருத்தம்மா’
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ‘கருத்தம்மா’ என்று ஒரு திரைப்படம் எடுத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள குக்கிராமத்தில் பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் புகட்டுவார்கள். அந்த பெண் குழந்தை அங்கிருந்து தப்பிச் சென்றுவிடுவாள். பிற்காலத்தில் நன்கு வளர்ந்து ஒரு டாக்டராக மீண்டும் அந்த கிராமத்துக்கு வருவாள். தன் தந்தைக்கே அவள் மருத்துவம் பார்ப்பதுபோல அந்த திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
முளையிலேயே கிள்ளி எறிவது போல பிஞ்சுக் குழந்தைகளை இவ்வாறு கொலை செய்யும் சம்பவங்கள் கிராமங்களில் நடக்கின்றன. படித்தவர்கள்கூட இவ்வாறு செய்கின்றனர். இது போன்ற சமூக விரோத செயல்கள் தருமபுரி, மதுரை மாவட்டங் களில்தான் அதிகம் நடக்கின்றன. சட்ட விரோதமாக குழந்தைகளை தத்தெடுக்கும் நிகழ்வுகளும் தருமபுரி மாவட்டத்தில் அதிகம் நடக்கின்றன.
பெண்ணாய் பிறந்த ஒரே காரணத்துக்காக பெண் சிசுக்களை ஈவிரக்கமின்றி கொலை செய்யும் சம்பவம் உலகில் வேறு எங்குமே நடைபெறுவதில்லை. பிளேடால் சிசுக்களின் கழுத்தை அறுத்து கொல்வதும், பிறந்த குழந்தைக்கு உமியைக் கொடுத்து கொல்வதும் தருமபுரியில் நடக்கிறது. இத்தகைய சம்பவங்களில் பெண்கள் முக்கியக் குற்றவாளிகளாக உள்ளனர். பெண் குழந்தைகளை விரும்பாத கணவர்களுக்கும் பெண் சிசுக் கொலையில் சம பங்கு உள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரரான பெண் மீது இந்த நீதிமன்றம் மிகவும் பரிதாபம் காட்டுகிறது. இவரது வழக்கு தருமபுரி மாவட்ட மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இரக்கமின்றி நடவடிக்கை
பெண் சிசுக் கொலைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வித இரக்கமும் காட்டாமல் மேற்கொள்ள வேண்டும். பெண் சிசுக் கொலைகளுக்கு எதிரான போராட்டத்தில் வருவாய், காவல் துறையினர் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
இந்த சமூக அவலத்தை தூக்கி எறியும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு முகாம்களை சட்டப் பணி குழுக்கள் நடத்த வேண்டும். பெண் சிசுக் கொலைக்கு எதிரான சட்டக் கல்வி முகாம்களை கிராமங்களில் நடத்த தருமபுரி மாவட்ட முதன்மை நீதிபதி ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தேவதாஸ் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment