Monday, 16 June 2014

பூனை புலியான கதை: சிங்கப்பூர் நகரக் கட்டமைப்பு

பூனையை ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டினால், அங்கிருந்து தப்பிக்க அது எப்படி வேங்கையைப் போல் மாறுமோ, அது கடுகு போன்று சிறுத்திருக்கும் சிங்கப்பூர் நாட்டுக்கும் முற்றிலும் பொருந்தும்.
சற்றேறக்குறைய சென்னைப் பெருநகரையொத்த அளவில் 710 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள, சுகாதாரத்துக்குப் பெயர் பெற்ற இந்தப் பொருளாதார வல்லரசு, சில தசாப்தங்களுக்கு முன்பு காலராவின் பிடியில் சிக்கியிருந்தது; குடிநீர்ப் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது என்பதை நம்புவது சிரமமே.
ஒரு காலத்தில் இந்திய மன்னர்களால் ஆளப்பட்டதை உணர்த்தும் வகையில், சிங்கபுரி என்ற சமஸ்கிருதப் பெயரை வரலாற்று அடையாளமாக இன்றும் தாங்கி நிற்கிறது இந்த சிங்கப்பூர்.
1965-ல் மலேசியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கப்பூர், இன்று வளர்ச்சியில் மலேசியாவை மிஞ்சியுள்ளது. சிறிய நிலப்பரப்பை எப்படி உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று சதா சர்வகாலமும் சிந்தித்து, முறையாகத் திட்டமிட்டு அவற்றை உரிய முறையில் அந்நாட்டு அரசு செயல்படுத்தி வருவதே இந்நீடித்த வளர்ச்சிக்குக் காரணம். இருக்கின்ற சிறிய வட்டத்துக்குள்தான் வளர்ந்தாக வேண்டும் என்ற இக்கட்டான நிலை உருவானதே சிங்கப்பூரின் சீரிய வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார் அந்நாட்டுச் சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் விவியன் பாலசுப்பிரமணியம்.
சாலைகள்
ஒரு நகரின் அடிப்படைத் தேவைகளான தரமான சாலைகள், சுகாதாரமான குடிநீர், இலகுவான பொதுபோக்குவரத்து சேவை ஆகியவற்றை மக்களுக்குச் சிறப்பாக அளித்து உலகின் சிறந்த நகரமைப்பு நிர்வாகங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது சிங்கப்பூர். 85 சதவீத மக்கள் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர்.
சாலைகளில் குப்பையைப் பார்க்கவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அங்குள்ள சந்து பொந்து சாலைகளில் கூட ஒரு குண்டு குழியைக் காணமுடியவில்லை. நம்மூரில் சாலைகளில் காணப்படும் சிறு சிறு ஒட்டு வேலைகள் அங்குத் தென்படவே இல்லை என்பது கூடுதல் தகவல்.
நமது நாட்டில் சாலைகளுக்குப் பயன்படுத்தும் அதே தாரைத்தான் அங்கும் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டும் எப்படித் தரத்துடன் காட்சியளிக்கிறது என்பதை நமது சாலை காண்டிராக்டர்கள்தாம் சொல்ல வேண்டும். மையப்பகுதியில் இருந்து இடது ஓரத்துக்கு நீர் வழிந்தோடும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதைகளின் ஓரங்களில் மரங்களுக்கு நீர் கிடைக்கும் வகையில் அவற்றைச் சுற்றிப் புல்தரையைப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
சாலைகளின் ஓரங்களில் ஆங்காங்கே இரும்பு கிரில்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றினுள் மழைநீர் புகுந்து, மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக நகரில் உள்ள நீர் சேகரிப்பு மையங்களை நோக்கி ஓடுகின்றன. இதனால் வெள்ளப் பெருக்கோ, நீர் தேக்கமோ கிடையவே கிடையாது.
இந்த நகரத்தில் எங்குமே இதுவரை நிலத்தடி குழாய் கிணற்றில் தண்ணீர் கிடைத்ததே இல்லை என்பது ஆச்சரியமான உண்மை. அதை உணர்ந்துதான் நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பகுதிகளை மழை நீர் சேகரிப்புக்கேற்றவாறு அரசு மாற்றியுள்ளது, இன்றும் குறிப்பிட்ட அளவு குடிநீரை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது சிங்கப்பூர் அரசு.
நியூ வாட்டர் புரட்சி
இதுதவிர, வீடுகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீர், சொட்டுக் கூட விரயமாகாமல், நகர் முழுவதும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட பிரத்தியேக ராட்சத குழாய்கள் மூலம், நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. மழை நீரைச் சேகரிக்கத் தனியாக வேறு நிலத்தடி குழாய்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் நீரை நியூவாட்டர் (Newater) என்று அவர்கள் அழைக்கின்றனர். கழிவுநீர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் “யூஸ்டு வாட்டர்” என்ற பதத்தையே அவர்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தி வருகின்றனர். சவ்வூடு பரவல் , நவீன உத்திகள் மூலமாக இந்நீர் சுத்திகரிக்கப்படுகிறது. எனினும், இதில் தாதுச்சத்துக்கள் குறைவாக உள்ளதால், அதிக அளவில் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதில்லை.
ஆனால், சுத்தமான நீர் தேவைப்படும் தொழிற்சாலைகளில் முழுக்க, முழுக்க நியூவாட்டரே பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நியூவாட்டரின் ஒரு பகுதியை மழைநீர் சேகரிப்பு மூலம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீரிலும் கலக்கிறார்கள். சிங்கப்பூரின் 30 சதவீத தேவையை நியூவாட்டர் பூர்த்தி செய்கிறது. ஆனால் குழாயைத் திறந்ததும் காய்ச்சாமல் குடிக்கும் வகையில், பாதுகாப்பான குடிநீர் வருவதை அரசு உறுதி செய்துள்ளது.
கூவம் போல் மாசுபட்டுக் கிடந்த கல்லாங் நதியை 10 ஆண்டுகளில் சுத்தப்படுத்தி, அதைச் சுற்றுலா மையமாகவும், பொழுதுபோக்கு மையம் போலவும் மாற்றியிருப்பது சென்னைவாசிகளுக்கு நம்பிக்கை தரும் விஷயமாகும். சிங்கப்பூர் அரசு, அந்த ஆற்றங்கரைகளில் வசித்த குடிசைவாசிகளுக்கு வீட்டு வசதி செய்து கொடுத்து, ஆற்றினுள் கலக்கும் கழிவுநீர் கால்வாய்களைக் கண்டுபிடித்து அடைத்து, ஒரு வழியாக 1987-ல் முழுவதுமாகச் சுத்தப்படுத்தியது.
பன்றி இறைச்சிக் கூடங்கள் அகற்றப்பட்டுப் பன்றி வளர்ப்பு தடை செய்யப்பட்டது. பன்றிக் கழிவுகள் கொட்டப்படுவதும் தடுக்கப்பட்டது. அந்த ஆற்றில் காணாமல் போயிருந்த மீனினம் மீண்டும் அங்கு திரும்பத் தொடங்கியது அந்நீரின் தூய்மைக்குச் சான்று என்று மார்தட்டிக்கொள்கிறது சிங்கப்பூர் நிர்வாகம்.
பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கொட்டும் இடங்களைப் பார்த்து புலம்பும் நமக்கு, லோரங் ஹாலஸ் என்னும் பூங்கா பொறாமையை ஏற்படுத்துகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அதுவும் குப்பை கொட்டும் இடமாகத்தான் இருந்துள்ளது. இன்சினரேஷன் எனப்படும் திடக்கழிவுகளில் இருந்து நீரைப் பிரித்து, ஆவியாக்கி, பின்னர் குப்பைகளைச் சாம்பலாக்கும் முறையைப் பின்பற்றியதால் குப்பைகளை மலை போல் சேர்த்து வைக்கும் நிலை தவிர்க்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் அரிய வகை பறவைகளும், அதன் காரணமாகச் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது என்கிறார் லோரி என்னும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரி.
மணமாகலையா? வீடில்லை
சிங்கப்பூரில் 85 சதவீத மக்கள் சொந்த வீடுகளில் (அடுக்குமாடி) வசிக்கின்றனர். அனைவருக்கும் வீட்டு வசதியை அரசு செய்து தருகிறது. திருமணமாகாதவர்களுக்குக் கண்டிப்பாக வீடு கிடையாது. ஈபிஎஃப் பணத்தைப் பயன்படுத்திக்கூட வீட்டுக் கடன் தவணையைக் கட்ட அரசு அனுமதிக்கிறது.
கார் வாங்குவதில் ஒழுங்குமுறை
சிங்கப்பூர்வாசிகள் நினைத்த மாத்திரத்தில் கார் வாங்கிவிட முடியாது. அதற்கு டெண்டர் முறையில் ஏலம் நடத்தியே அரசு முடிவு செய்கிறது. ஏலம் எடுப்பதற்கு காரின் குதிரை சக்தித் திறனுக்கேற்றாற்போல் சுமார் ரூ.40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (ஒரு டாலர் சுமார் ரூ.49), வரை செலுத்த வேண்டியிருக்கும். அந்தச் சான்றிதழை பெற்ற பிறகே, ஒருவர் காரை வாங்க முடியும். அதனால் மிக மிக வசதி படைத்தவர்கள் மட்டுமே கார் வாங்க முடியும்.
மேலும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கார்களை நகருக்குள் ஓட்டுவதற்குத் தனி உரிமமும், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை ஓட்டுவதற்குச் சற்று குறைந்த விலையில் தனி உரிமமும் வழங்கப்படுகிறது. அவசரமாகப் போகவேண்டுமெனில் பீக் ஹவர்களில் பிந்தைய வகை சான்றளிக்கப்பட்ட கார்கள் தனிக்கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் கார்களின் தேவையற்ற பெருக்கம் தடுக்கப்படுகிறது. சாலைகளில் நெரிசலும் தடுக்கப்படுகிறது. பைக் வாங்குவதற்கும் ஏலமுறை உண்டு.
இவற்றின் காரணமாக, மெட்ரோ ரயில், பஸ் , லைட் ரயில் சிஸ்டம் போன்ற பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். முக்கியமாக, போதுமான அளவில் அதாவது, 6 ஆயிரம் பஸ்களும், பல நூறு ஜோடி மெட்ரோ ரயில்களும், லைட் ரயில் சேவைகளும் (பெட்டிகள் குறைவான மெட்ரோ ரெயில்) இயக்கப்படுவதால் போக்குவரத்து என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இல்லை.
மின்சாரம், தண்ணீர் ஆகியவை மிக அரிதான பொருட்கள் என்பதால் அவற்றுக்கு மானியம் இல்லாமல் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தேவைக்கேற்ப அவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்திகிறார்கள், என்கிறார் ஜார்ஜ் மாதவன்.
நகரத்தில் மக்கள் தொகை பெருகப்பெருக, ஆற்றங்கரையோரம் வசித்து வந்த மக்களைக் கொஞ்சம், கொஞ்சமாக வெளியேற்றி, புறநகர்ப் பகுதிகளில் சொந்த வீடுகளில் வசிக்கச் செய்தது முதல், அவர்களுக்கு அங்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து வைத்தபிறகே அந்த இடங்களுக்கு அவர்களை இடம்பெயரச் செய்தது வரை, அந்நாட்டு அரசு நகர்ப்புறத் திட்டமிடலைக் கவனத்துடன் மேற்கொண்டு வருகிறது.
இவ்வளவு சிறப்புகளைப் பெற்றிருந்தும், மற்ற வளர்ந்த மாநகரங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்ற உந்துதல் காரணமாக இம்மாநாட்டை சிங்கப்பூர் நடத்தியது. இந்தத் தேடல்தான் அந்நாட்டை நகர நிர்வாகத்தில் உலகின் முன்மாதிரி நாடாக திகழச் செய்கிறது என்பதில் ஆச்சரியம் இல்லை.

No comments:

Post a Comment