Monday, 16 June 2014

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்றால் என்ன?

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அல்லது மரபுசாரா எரிசக்தி என்பது என்ன?
புதுப்பிக்கத்தக்க அல்லது மரபுசாரா எரிசக்தி என்பது பசுமை எரிசக்தி என்றும் அழைக்கப்படுகிறது. காற்று, சூரியஒளி, உயிரிக் கழிவுகள், தாவரக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாகக் கருதப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நேரடியாக உற்பத்தி செய்து, அப்போதே பயன்படுத்த முடியுமா?
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் காற்று, சூரிய ஒளி ஆகியவற்றின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்த முடியாது. அவற்றை பேட்டரியில் சேமித்து அல்லது மின் தொகுப்பில் இணைத்தே பயன்படுத்த முடியும்.
சூரிய சக்தி, காற்றாலை மின்சாரத்தை ஏன் நேரடியாக பயன்படுத்த முடியாது?
சூரிய ஒளியும், காற்று வீசும் திறனும் இயற்கையின் வானிலை மாற்றத்துக்கு ஏற்ப நிமிடத்துக்கு நிமிடம், நொடிக்கு நொடி மாறுபடும் தன்மை கொண்டது. எனவே, அதன்மூலம் உற்பத்தியாகும் மின்சார அளவும் நொடிக்கு நொடி மாறுபடும். சில நேரங்களில் மின் உற்பத்தி இல்லாத நிலையும் ஏற்படும். இதனால்தான் நேரடியாக பயன்படுத்த முடிவதில்லை.
சூரியசக்தி என்றால் என்ன? அதை வீடுகளில் பயன்படுத்த முடியுமா?
சூரிய மின்சக்தி என்பது சூரிய ஒளியில் இருக்கும் வெப்பத்தை மின் திறனாக மாற்றி சேமிப்பதாகும். சூரிய மின்சக்தியை பேட்டரியில் சேமித்து, பின்னர் அதை வீடுகளில் பயன்படுத்த முடியும்.
சூரிய மின்சக்தியை மட்டுமே நம்பி மின் சாதனங்களை இயக்க முடியுமா?
நொடிக்கு நொடி சூரிய ஒளி மாறுபடுவதால், மின்சாதனங்கள் சீராக இயங்க முடியாது. எனவே, சூரிய மின்சக்தியை மட்டுமே நம்பி மின்சாதனங்களை இயக்க முடியாது. சூரிய மின்சக்தியை பேட்டரி மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
காற்றாலைகளால் ஆண்டு முழுவதும், நாள் முழுவதும் மின் உற்பத்தி செய்ய முடியுமா?
காற்றாலைகளைப் பொருத்தவரை காற்று நிலையாக வீசும் காலத்தில் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தில் தென் மேற்கு பருவக்காற்று வீசும் காலத்தில் மே மாதம் முதல் அக்டோபர் வரை, காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தியாகும். மற்ற மாதங்களில் எதிர்பார்க்கும் அளவு உற்பத்தி இருக்காது. ஆனால் நிலையற்ற முறையில் கூடுதலாகவோ, குறைவாகவோ மின்சாரம் உற்பத்தியாகும்.
உயிரிக் கழிவு மின்சாரம் என்பது என்ன?
மனித மற்றும் விலங்குக் கழிவுகள், தாவரக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கழிவுகள் இருக்கும் அளவுக்கு ஏற்ப மின்உற்பத்தி செய்ய முடியும்.

No comments:

Post a Comment