ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் இன்று காலை சரியாக 9.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார். அவருடன் ஆந்திர மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் உடன் இருந்தனர்.
பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 செயற்கைக்கோள்கள் இதன்மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 714 கிலோ எடையுள்ள ‘ஸ்பாட்-7’, ஜெர்மனியைச் சேர்ந்த ‘அய்சாட்’, சிங்கப்பூரின் ‘வெலோக்ஸ்’, கனடாவின் என்எல்எஸ் ரகத்தைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்கள் ஆகியவற்றை பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் சுமந்து சென்றது.
சனிக்கிழமை தொடங்கிய கவுன்ட்டவுன்:
ராக்கெட் ஏவுவது தொடர்பான விஞ்ஞானிகளின் இறுதிகட்ட ஆலோசனைகள் வெள்ளிக்கிழமை நடந்தது. இதற்கான 49 மணி நேர கவுன்ட்டவுன் சனிக்கிழமை மாலை தொடங்கியது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட பணிகள் முடிவுற்ற நிலையில், இறுதிகட்ட கண்காணிப்பு பணியில் விஞ்ஞானிகள் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
நேரம் மாற்றம் ஏன்?
பிஎஸ்எல்வி-சி 23 ராக்கெட்டை 30-ம் தேதி காலை 9.49 மணிக்கு விண்ணில் ஏவ ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. 3 நிமிடங்கள் தாமதமாக 9.52 மணிக்கு ராக்கெட்டை ஏவ முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து நிருபர்களிடம் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது தொடர்பாக விஞ் ஞானிகள் குழுவினர் வெள்ளிக் கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினர். அப்போது, விண்ணில் மிதக்கும் 13 ஆயிரம் வகையான குப்பைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். குப்பைகள் அதிகம் இருப்பதால், ராக்கெட் செலுத்தப்படும் நேரத்தை சிறிது தாமதப்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்தனர். எனவே, ராக்கெட் ஏவப்படும் நேரம் 3 நிமிடம் தாமதமாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதுவரை மொத்தம் 26 பிஎஸ்எல்வி ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 25 ராக்கெட்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன. 2011-ம் ஆண்டு அக்டோபரில் பிஎஸ்எல்வி-சி18 ராக்கெட்டும் ஒரு நிமிடம் தாமதமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் உறுதி:
முன்னதாக நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) இஸ்ரோ மையம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பி.எஸ்.எல்.வி.சி-23 குறித்த தகவல்களை விளக்கினார்.
பின்னர் ட்விட்டரில்: "புதிய விண்வெளித் திட்டங்களை மேற்கொள்ள இந்திய அரசு தொடர்ந்து உந்து சக்தியாக இருக்கும் என" மோடி தெரிவித்திருந்தார்.
முதல் முறையாக..
முதல் முறையாக, ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது பற்றிய தகவல்களை நேரடியாக தெரிவித்துக்கும் பணியில் பெண் இன்ஜினியர் ஒருவர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அவரது பெயர் லலிதாம்பிகா.
சரியான பாதையில்...
பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் அது சுமந்து சென்ற 5 செயற்கோள்களையும் சரியான சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.
'நம்மால் முடியும்': பிரதமர் உறுதி
பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட், பி.எஸ்.எல்.வி. பயணத்தில் மேலும் ஒரு வெற்றி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்துள்ளது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை நேரடியாக பார்வையிட்டது பெருமையளிக்கிறது. இதற்காக இஸ்ரோவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது ராக்கெட்டுகள் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. பல தலைமுறைகளாக இதற்காக கடுமையாக உழைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் உலக அரங்கில் விண்வெளித்துறையில் இந்தியா தன்னிறைவு பெறச்செய்துள்ளனர்.
நாட்டின் வளர்ச்சிக்கும், விண்வெளித்துறை வளர்ச்சிக்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது. 5 நாடுகளுடைய செயற்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் தாங்கிச் சென்றிருப்பது உலக நாடுகள் மத்தியில் நமக்கு மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
நமது தேசத்தின் விண்வெளித்திட்டங்கள் மிகவும் தனிச்சிறப்பானவை. விண்வெளித்துறையில் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. இந்திய தொழில்நுட்ப வளர்ச்சி பழங்கால தொன்மை வாய்ந்தது. பாஸ்கரச்சார்யா, ஆர்யபட்டா ஆகியோர் விட்டுச்சென்ற பணிகள் தான் இப்போதும் தொடர்கிறது. விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு மத்திய அரசு முக்கியத்துவம அளிக்கும். சார்க் நாடுகளுக்கு என தனி செயற்கைக்கோளை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும். இது நமது அண்டை நாடுகளுக்கு பேருதவியாக இருக்கும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நாட்டில் பேரிடர் மேலாண்மையிலும் பெரும் பங்காற்றி வருகிறது. குறிப்பாக 'பைலின்' புயல் தாக்கியபோது அது குறித்து முன் அறிவிப்புகளை அவ்வப்போது துல்லியமாக வெளியிட்டு பல உயிர்களை காக்க உதவியது.
ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட கிராவிட்டி என்ற திரைப்படத்தை உருவாக்க இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலத்தை செலுத்த ஆன செலவைவிட அதிகமாக இருந்ததாக தெரிகிறது. குறைந்த செலவில் ஒரு பெரிய சாதனையை நாம் செய்துள்ளோம். விண்வெளித்துறைக்கு மேலும் பல வெற்றிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. நம்மால் முடியும்!. இவ்வாறு பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment