Monday, 6 May 2013

சங்க கால "சேரமான்” நாணயம் கண்டுபிடிப்பு


இருபது ஆண்டுகளுக்கு முன், கரூர் கடை வீதியில் இருந்த சிறிய பாத்திரக் கடையில், ஒரு கிலோ பழைய செம்பு நாணயங்களை வாங்கி, ஒரு குவளையில் போட்டு வைத்திருந்தேன். அந்த நாணயங்கள், நீண்ட காலம் அமராவதி ஆற்றுப் படுகையில் கிடந்து, ரசாயனக் கலவைகளால் உருமாற்றப்பட்டு, சேதமடைந்து இருந்ததால், அவைகளைப் பார்வை யிடாமல் வைத்திருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன், அந்தக் குவளை என் கண்ணில் பட்டது. ஓய்வு நேரத்தில் அந்த நாணயங்களை ஒரு தட்டில் கொட்டி, ஆய்விற்குப் பயனுள்ள நாணயம் ஏதாவது இருக்கிறதா என்று ஆய்வு செய்தபோது, அதிகம் சேதம் ஏற்படாத ஒரு வட்ட வடிவிலான செம்பு நாணயம், என் பார்வையில் பட்டது. அந்த நாணயத்தின் புகைப்படமும், வரைபடமும் கீழே கொடுத்துள்ளேன்.

நாணயத்தின் முன்புறம், தேய்ந்த நிலையில் நின்று கொண்டிருக்கும் யானை ஒன்று தெரிந்தது. பின்புறம், நின்று கொண்டிருக்கும் குதிரை ஒன்று தெரிந்தது. குதிரையின் முகம் சேதமடைந்திருந்ததால், தெளிவாக இல்லை. யானையின் மேல், சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அந்த எழுத்துக்களைச் சுற்றி, ரசாயனக் கலவைகளால் ஏற்பட்ட மாசு, மிக கடினமாக ஒட்டிக் கொண்டிருந்தது. ஓய்வு கிடைக்கும் நேரங்களில், மிக நுட்பமாக சுத்தம் செய்தேன். பல நாட்கள் இவ்வாறு சுத்தம்
செய்தபின், தமிழ் - பிராமி எழுத்து முறையில், கோ சேரமான் ஸ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. 

நாணயத்தின் குறுக்களவு - 13 மி.மீ., எடை - 0.800 கிராம். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் பதிப்பித்த சங்க இலக்கியமான, புறநானூறு நூலை படித்துப் பார்த்தபோது, சங்க காலத்தில் சேரமான் என்ற பெயருடைய பத்தொன்பது அரசர்களின் பெயர்களை அவர் வரிசைப்படுத்தியிருப்பதைக் கண்டேன். இந்த நாணயம், எந்த சேரமான் மன்னரால் வெளியிடப்பட்டது என்பதை உறுதியாக கூற முடியவில்லை. 

கோ என்ற முதல் எழுத்து, அரசனைக் குறிக்கிறது. அதனால், இந்த நாணயம் சேர அரசனால் வெளியிடப்பட்டது என்பது உறுதியானது. சங்க காலச் சேரர்களின் நாணயங்களின் பின்புறம், வில் - அம்பு குறியீடு கண்டிப்பாக இருக்கும். ஆனால், இந்த நாணயத்தில், நின்று கொண்டிருக்கும் குதிரை இருப்பது, சற்று வித்தியாசமாகத் தென்பட்டது. இதனால், சங்க கால சேரர் ஆட்சியில் இருந்து பிரிந்து சென்ற, அதே வம்சத்தைச் சேர்ந்த அரசன் வெளியிட்டிருக்கலாமோ என்ற ஐயம் ஏற்பட்டது. 

பெயரில் கடைசியாக இருக்கும், ஸ ஒரு முக்கியமான எழுத்தாகும். சங்க கால நாணயங்களில், இந்த எழுத்து காணப்படவில்லை. கி.பி., இரண்டாம் நூற்றாண்டில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, சாதவாகனர்கள் தென் இந்தியாவின் பெரிய நிலப்பரப்பை ஆண்டனர். அவர்கள் வெளியிட்ட இரு மொழி நாணயங்களைப் படித்த தொல்பொருள் அறிஞர் இரா.நாகசாமி அவர்கள், சாதவாகனர்கள் வெளியிட்ட நாணயங்களின் பெயரின் முடிவில், ஸ இருப்பதாகவும் அந்த எழுத்து இருந்தால், கு என்று படிக்க வேண்டும் என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி படிக்கும்போது, கோ சேரமான் கு என்று வரும். அதாவது, இந்த நாணயம் சேரமானால் வெளியிடப்பட்டது என்று, பொருள் கொள்ள வேண்டும். இந்த நாணயத்தின் காலம், கி.பி., இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

No comments:

Post a Comment