Wednesday, 1 May 2013

குறைந்த விலையில் காய்கறி விற்க திட்டம்


வெளிச் சந்தையில், காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த, குறைந்த விலையில், காய்கறி விற்பனை செய்யும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, அடுத்த வாரம் துவக்கி வைக்கிறார்.தமிழகத்தில், வெளிச் சந்தைகளில் காய்கறி விலை உயர்ந்து வருகிறது. இதனால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.



கூட்டுறவு சங்கங்கள்

"வெளிச்சந்தையில், காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த, விளையும் இடத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம், காய்கறிகள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, நகர்ப்புறங்களில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் விற்பனை செய்யப்படும்' என, தமிழக அரசு, அண்மையில் தெரிவித்திருந்தது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை, தோட்டக்கலை முகமை மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, கூட்டுறவு சங்கங்கள் மூலம், சென்னையில், 25; இதர மாவட்டங்களில், 75 என, தமிழகத்தில் மொத்தம், 100 பசுமை பண்ணை நுகர்வோர் காய்கறி கடைகள் திறக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இடைத் தரகர்கள்

இந்த கடைகளில், காய்கறிவிலை, வெளிச்சந்தையை விட, 20-30 சதவீதம் குறைவாக இருக்கும் என, தெரிகிறது. மேலும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு, நுகர்வோர், விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர்.இதுகுறித்து, நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:

உருளை, பீன்ஸ், கோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகள், மலைப்பகுதியிலும், கத்தரி, வெண்டை, புடலை போன்ற நாட்டு காய்கறிகள், திண்டிவனம் அடுத்த ஒலக்கூரிலும் அதிகம் விளைகின்றன. காய்கறிகள் விளையும் பகுதியில் இருந்து, லாரிகள் மூலம், காய்கறிகள் கூட்டுறவு கடைகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளும், நுகர்வோரும் பயன்பெறுவர். இத்திட்டத்தை, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா, அடுத்த வாரம் துவக்கி வைக்கிறார்.

No comments:

Post a Comment