பழநி, சரவணப் பொய்கையில் தண்ணீர் இல்லாததால், 20 லிட்டர் தண்ணீர் கேனை, 50 ரூபாயிக்கு விற்கின்றனர்.
முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள், வேறு வழியின்றி, தண்ணீர் கேன்களை வாங்கி குளிக்கின்றனர். பழநி கோவில் முக்கிய தீர்த்தமாக, சரவணப்பொய்கை தீர்த்தக் கிணறு உள்ளது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும், பராமரிப்பின்றியும் இருந்ததால், தற்போது தண்ணீர் முழுமையாக வற்றிவிட்டது.திருஆவினன்குடி கோவில் அருகே, முடி காணிக்கை நிலையத்தில், தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடிக்கின்றனர். இவர்கள், சரவணப்பொய்கையில் நீராடுவது வழக்கம்.சரவணபொய்கை வறண்டதை பயன்படுத்தி, 20 லிட்டர் தண்ணீர் கேன்களை, 50 ரூபாய்க்கு சிலர் விற்கின்றனர்.
பக்தர்கள் இவற்றை வாங்கி, சரவணப்பொய்கை சென்று குளிக்கின்றனர்.ஆண்டுக்கு பல கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வசூல் உள்ள, பழநி கோவில் நிர்வாகம், சரவணப் பொய்கை புண்ணிய தீர்த்தக் கிணற்றை, கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது, பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.இதை தூர் வாரி, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, குறைந்த கட்டணத்தில் குளிக்க, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment