Tuesday, 28 May 2013

கல்லூரி மாணவர்கள் தமிழிலும் தேர்வு எழுதலாம் உற்சாகம்! . ஆங்கிலம் தான் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ்

தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மாணவ, மாணவியர், வரும் கல்வியாண்டில், ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசு உத்தரவை, வாபஸ் பெறும்படி, உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாணவர்கள்,தங்களுடைய உள் தேர்வுகளை, அவரவர் விருப்பப்படி, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி வழிக் கல்வி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவியர், தங்கள் விருப்பப்படி தேர்வுகளை, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதி வந்தனர். தமிழில் தேர்வு எழுத அனுமதித்ததன் மூலம், கிராமப்புற மாணவர்கள், அதிகம் பயன்பெற்றனர்.


ஆங்கிலம் கட்டாயம்


இச்சூழலில், வரும் கல்வியாண்டிலிருந்து, மாணவ, மாணவியர், அசைன்மென்ட் மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், அதிக வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். மாணவ, மாணவியர் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என, தேர்வு முறை ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டதற்கு காரணம் கூறப்பட்டது.இதுதவிர, ஆசிரியர்களும், பாடங்களை, ஆங்கிலத்தில் தான் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவிற்கு, மாணவ, மாணவியரிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதுவரை தமிழில் தேர்வு எழுதி வந்த மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்வு எழுத சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து, தினமலர் நாளிதழில்,26ம் தேதி, விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசு உத்தரவிற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஆலோசனை


அதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலர், உயர் கல்வித் துறை செயலர் ஆகியோரை அழைத்து பேசினார். அதன்பின், மாணவர்கள் விரும்பும் மொழியில், தேர்வு எழுத அனுமதிக்க முடிவு செய்தார்.


இது குறித்து முதல்வர் விடுத்துள்ள அறிக்கை:


தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மாணவ, மாணவியர், தங்களுக்கான உள் தேர்வுகளை, ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டதாக, பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலர், உயர் கல்வித்துறை செயலர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன்.


விவாதத்தின் போது, ஆங்கில மொழித்திறனை வளர்த்துக் கொள்ள, தங்களது உள் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழ்நாடு மாநில, உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும், தமிழ் வழியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.



இந்த உத்தரவு, என் கவனத்திற்கு கொண்டு வரப்படாமல், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.ங்கில மொழி வழி அல்லது தமிழ் மொழி வழியில் படித்தாலும், மாணவ, மாணவியர், தமிழில் உள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தான் என் எண்ணம். எனவே, ஆங்கில மொழி வழியில் படிக்கும் மாணவ, மாணவியரும், தங்களுடைய உள் தேர்வுகளை, தமிழ் மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என, அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால், வெளியிடப்பட்டுள்ள உத்தரவை, திரும்பப் பெற ஆணையிட்டுள்ளேன். அனைத்து மாணவ, மாணவியரும், தங்களுடைய, உள் தேர்வுகளை, அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment