Thursday 21 November 2013

மகிளா வங்கி


மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளில் மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. ‘பாரதிய மகிளா வங்கி’. நாடாளுமன்றத்தில் இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் இந்த அரசுடைமை வங்கியின் முதல் கிளையைப் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்திருக்கிறார். சோனியா காந்தி, ப. சிதம்பரம், மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவாண் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். பெண்களுக்காக – பெண்களே – பெண்களைக் கொண்டு நடத்தும் வங்கி இது.

ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுடன் இந்த வங்கி தொடங்கப்பட்டிருக்கிறது. 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுக்க மேலும் 771 கிளைகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. 2020-ம் ஆண்டுக்குள் இந்த வங்கியின் மூலம் 60,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த வங்கிகள் தொடங்கப்படுவதாகப் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். இந்த வங்கியில் சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படும் தொகைக்குப் பிற வங்கிகளைவிட அரை சதவீதம் அதிக வட்டி தரப்படும். ஒரு லட்ச ரூபாய் வரையிலான சேமிப்புக்கு 4.5% வட்டியும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொகைக்கு 5% தொகையும் தரப்படும்.

‘தொடக்க காலத்தில் இந்த வங்கிகள் பெண்களுக்கு மட்டுமே சேவைகளை அளிக்கும். ஒரு பெண்மணி சுயமாகத் தொழில் தொடங்கக் கடன்பெற நினைத்தால் அவருக்குக் கடனுக்கு ஈடுதர முடியாத நிலை இருந்தால், அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அது பாலினம் சார்ந்த நடவடிக்கை. அந்த நிலை வராமலிருக்கத்தான் இந்த வங்கி’ என்று சிதம்பரம் பேசியிருக்கிறார்.

கல்வி கற்கவும், வீடு கட்டவும், சிறிய அல்லது நடுத்தரத் தொழில்கள் தொடங்கவும், உணவுப் பொருள்கள் தயாரிக்கவும், சமையல் ஒப்பந்த வேலைகளில் ஈடுபடவும் இந்த வங்கிகள் கடன் தரும் என்று வங்கியின் முதல் தலைவரும், நிர்வாக இயக்குநருமான உஷா அனந்தசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடங்களை ஒதுக்கீடு செய்யும் மசோதா, மாநிலங்களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டுக் கிடப்பில் போடப்பட்ட நிலையிலிருக்கிறது. அதை நிறைவேற்ற முட்டுக்கட்டையாகச் செயல்பட்டவர்களின் கோரிக்கைகளிலும் மிகுந்த நியாயம் இருக்கிறது. இப்படி ‘மகளிருக்காக’ என்று தொடங்கப்படும் எல்லாவற்றிலும் படித்த, மேல் சாதிப் பெண்களுக்குத்தான் வாய்ப்புக் கிடைக்கும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் உள்ஒதுக்கீடு செய்தால் இதை ஏற்றுக்கொள்வோம் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். இதை இந்த மகளிர் வங்கிகள் விஷயத்தில் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தேர்வு நடத்துவதற்குப் பதிலாக - கல்வித்தகுதி உள்ள, வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த - பெண்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு வங்கி நடைமுறைகளில் நல்ல பயிற்சி அளித்து நியமிக்க வேண்டும். தகுதித் தேர்வு நடத்தி அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. அப்போதுதான் மகளிருக்கு மட்டுமல்ல, சமூக நீதிக்கும் மரியாதை தந்ததாகும்.

No comments:

Post a Comment