Saturday 29 June 2013

நாளை "நெட்” தேர்வு : சென்னையில் 14 ஆயிரம் பேர் பங்கேற்பு


யு.ஜி.சி.,யால் நடத்தப்படும், கல்லூரி விரிவுரையாளர் தகுதிக்கான தேசிய தகுதி தேர்வு(நெட்), சென்னையில், நாளை நடக்கிறது. பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) மாநில தகுதி தேர்வை (ஸ்லெட்), ஆண்டுக்கு ஒரு முறையும், தேசிய தகுதி தேர்வை (நெட்), ஜூன், டிசம்பர் ஆகிய இரு மாதங்களிலும் நடத்துகிறது. "ஸ்லெட், நெட்' தேர்வுகளில் வெற்றி பெற்றவர் மட்டுமே, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியில் சேர முடியும்.

இந்தாண்டிற்கான, "நெட்' நுழைவு தேர்வு, நாளை (30ம் தேதி), நாடு முழுவதும், 80 இடங்களில் நடக்கிறது. தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய, நான்கு மண்டலங்களில் நடக்கிறது. சென்னையில், 11 மையங்களில், 14 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து, பயிற்சி மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: "நெட்' தேர்வு, மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். மொத்தம், 350 மதிப்பெண். முதல் தாளில், பொது அறிவு கேள்விகளும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் பாடப்பிரிவு சம்பந்தமான கேள்விகளும் கேட்கப்படும். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வணிகவியல், சமூக சேவை, இசை, சட்டம், இந்திய கலாசாரம், குற்றவியல், தொல்லியல், மானுடவியல் உள்ளிட்ட, 94 பாடங்களில், "நெட்' தேர்வை எழுதலாம். கேள்விக்கு தவறாக பதிலளித்தால், மதிப்பெண் குறைப்பு இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment