நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனைத்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்தவரை, மனம்தான் எல்லாம். மனதிற்கு வெளியே வேறு உலகம் என்று எதுவும் கிடையாது. மனம்தான் இன்னொரு உலகைப் பற்றிய கற்பனையை நமக்குத் தருகிறது. நாம் வாழும் உலகில் நாம் காணும் விஷயங்கள் நமது மனதைப் பொறுத்தே அமைகின்றன. நமது உணர்ச்சிகளும்,எண்ணங்களும், உலகம் மற்றும் வாழ்வைப் பற்றிய நமது பார்வையை தீர்மானிப்பதோடல்லாமல், நமது ஆரோக்கியம், ஏற்புத்திறன் மற்றும் தீர்வுகாணும் தன்மை ஆகியவற்றையும் நுட்பமாகப் பாதிக்கின்றன.
ஒரு வளர்ந்த மனிதனின் மூளையானது சுமார் 11,000 மில்லியன் மூளை செல்கள் அல்லது நியூரான்களைக் கொண்டுள்ளது. நியூரானுக்கு நடுவில் செல் உடல் இருக்கிறது. அவற்றில் மெல்லிய இழைகள் இருக்கின்றன. இந்த இழைகளின் மூலமே, நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த 11,000 நியூரான்களின் உள் இணைப்புகள் மற்றும் உப பகுதிகளின் எண்ணிக்கைக்கு கணக்கில்லை என்பதால், நமது மூளையின் திறனுக்கு அளவில்லை. எனவே மனித மூளையானது, வாழ்நாளில் நடக்கும் அனைத்து விஷயங்களையுமே பதிவுசெய்து கொள்கிறது.
இந்த பதிவுசெய்யும் செயல்பாடு பற்றி சிலவிதமான கோட்பாடுகள் உள்ளன. இது எலக்ட்ரிகல் செயல்பாடு எனவும், ரசாயன செயல்பாடு எனவும் அல்லது இரண்டும் கலந்தது எனவும் சொல்லப்படுவதுண்டு. இந்த பதிவு செய்தலானது, ஒவ்வொரு விதமான செயல்பாடுகளுக்கும் ஏற்றவகையில் மாற்றம் செய்யப்படுவதாக நம்பப்படுகிறது. நினைவானது மூளையின் வெவ்வேறு பகுதியில் அதன் உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு பதியப்பட்டாலும், அது முழுமை என்ற நிலையில்தான் இருக்கிறது என்ற கருத்துக்கு ஆதாரம் இருக்கிறது. இந்த நிலையை ஹோலோகிராமுடன் ஒப்பிடலாம்.
நமது மூளையானது எவற்றையெல்லாம் சேகரித்து வைக்கிறது என்று பார்த்தால், நாம் பார்ப்பது,கேட்பது, உணர்வது என அனைத்தையும் அது பதிவு செய்கிறது. நாம் தூங்கும்போது எதையும் அதிகமாக பதிவுசெய்ய முடியாததற்கு காரணம், நமது புலன்கள் அந்த சமயத்தில் எதையும் அறிதாகவே உணர்கின்றன.
முடியும் என்று நம்புங்கள்
ஒரு செயலில் நமக்கு வெற்றி கிடைப்பதற்கான முதல் படியே, அதை நம்மால் வெற்றிகரமாக செய்ய முடியும் மற்றும் அதை செய்வதற்கான திறன் நம்மிடம் உள்ளது என்று நம்புவதுதான். இறைவன்,உங்களுக்கு அற்புதமான சக்தி கொண்ட மூளையை கொடுத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள். விஞ்ஞானிகள் கடுமையான முயன்றும் மூளையின் செயல்பாட்டு அற்புதத்தையும்,அதன் திறனையும் புரிந்துகொள்ள முடியவில்லை. மூளையானது, உங்கள் வாழ்வின் சிறியது முதல் பெரியது வரை அனைத்தையும் நினைவில் கொள்ளும் திறன் பெற்றது.
ஒரு விஷயத்தை பலரும் செய்கிறார்கள், உங்களைவிட வயதானவர்கள் செய்கிறார்கள், வயதில் குறைந்தவர்கள் செய்கிறார்கள், உங்களைவிட குறைவாய் படித்தவர்கள் செய்கிறார்கள் என்ற நிலை இருக்கையில், உங்களாலும் முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். மேற்கூறிய நபர்கள் சிறந்த நினைவாற்றலைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், ஏன் உங்களால் முடியாது என்று எண்ண வேண்டும்.இந்த நம்பிக்கைதான் நம்மை எதையும் சாதிக்க வைக்கும் மற்றும் நமது நினைவுத்திறனை மேம்படுத்த உதவும்.
நினைவாற்றல் மேம்பாடு வாழ்க்கையின் அம்சம்
ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை இல்லையெனில், அவனால் எதையும் சாதிக்க முடியாது. நம்பிக்கை இருந்தால் ஒரு மலையைக் கூட நகர்த்தி விடலாம் என்பது ஒரு பழமொழி.
வாழ்க்கையில் எதுவுமே எளிதாக கிடைத்து விடுவதில்லை. எளிதாக கிடைத்துவிட்டால், அது நமக்கு ஒரு பொருட்டாக தெரிவதில்லை. ஒரு விஞ்ஞானியோ, வரலாற்று அறிஞரோ, இசைக் கலைஞரோ,அரசியல்வாதியோ யாராக இருந்தாலும், தமது துறையில் வெற்றி பெறுவதற்கு முன்பாக, தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை, வெற்றிக்காகவே அர்ப்பணிக்கின்றனர்.
ஒருவர் தனது உடலை ஆரோக்கியமாக வைக்க விரும்பினால், முறையான உணவுமுறை, உடற்பயிற்சி,வாழ்க்கைமுறை ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். இவற்றுக்காக அவர் தனது வாழ்க்கையையே அர்ப்பணிக்க வேண்டியதில்லை. ஆனால், தனது வாழ்க்கை முழுவதும் அந்த நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அவற்றை வாழ்வின் அம்சங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.இதுபோலத்தான் நமது நினைவுத்திறனும். நினைவுத்திறனை மேம்படுத்துவதற்காக நீங்கள் உங்களின் வாழ்க்கையையே அர்ப்பணிக்க வேண்டியதில்லை. நினைவுத்திறன் மேம்பாட்டு வழிமுறைகளை வாழ்க்கையின் அம்சங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
தமது முயற்சிகளை நாளை துவங்கலாம், அடுத்த வாரம் துவங்கலாம், அடுத்த மாதம் துவங்கலாம் அல்லது அடுத்த வருடம் துவங்கலாம் என்று பலர் தள்ளிப் போடுகின்றனர். ஆனால், இதுபோன்று தள்ளிப் போடுவதால், ஏராளமானோர், கடைசிவரை எதையும் செய்யாமலேயே இருந்து விடுகின்றனர். எனவே எதை தொடங்கினாலும் உடனே துவங்குங்கள்.
தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள்
கடவுள் எப்போதுமே ஓரவஞ்சனை காட்டுவதில்லை. ஒருவரை சிறந்தவராகவும், இன்னொருவரை தாழ்ந்தவராகவும் படைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் மூளையின் திறனில் வித்தியாசம் இருப்பதில்லை, ஆனால் அதன் விருப்ப செயல்பாட்டில் வேறுபாடு இருக்கிறது. ஒருவரால் சிறப்பாக செய்ய முடிந்த ஒரு விஷயத்தை இன்னொருவரால் செய்ய முடியாது. அவர் வேறொரு விஷயத்தை சிறப்பாக செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பார்.
நீங்கள் உங்களின் நினைவாற்றலை மேம்படுத்த விரும்பினால், முதலில் உங்களின் தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள். உலகின் மிகப்பெரிய மேதைகள் பலர், மிக மோசமான ஞாபக மறதி நோயுள்ளவர்கள்(உதாரணம்-ஐன்ஸ்டீன ்) என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். எனவே நினைவுத்திறன் குறைபாடு என்பது அறிவுத்திறன் தொடர்பானதல்ல. அதேசமயம் அது வாழ்க்கைக்கு தேவையான விஷயமாகவும் இருக்கிறது. எனவே முறையான பயிற்சிகளின் மூலம் உங்களின் குறையை சரிசெய்யலாம்.
நம்பிக்கையுடன் இருங்கள்
நம்பிக்கையில்லா மனிதன் எதையுமே சாதிக்க முடியாது. நம்பிக்கை என்பது ஒரு போட்டியில் உங்களின் எதிராளியை வெல்வதற்கு மட்டும் தேவையான அம்சம் அல்ல, உங்களின் உள்ளார்ந்த பயம் மற்றும் சந்தேகங்களைப் போக்குவதற்கும் நம்பிக்கை அவசியம். ஓட்டுநர் பயிற்சியை முடித்த பிறகு, தனியாக சாலையில் வண்டியை ஓட்ட வேண்டுமெனில் நம்பிக்கை வேண்டும். முதன்முதலில் ஒரு வகுப்பில் பாடம் எடுக்க வேண்டுமெனில் நம்பிக்கை வேண்டும். அனைத்து எதிர்மறை சிந்தனைகளுமே சுய அழிவுக்கு வித்திடுபவை. ஒரு விஷயத்தை உங்களால் நினைவில் வைக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால், உங்களின் மூளைக்கு "அதை மறந்துவிடு" என்று கட்டளைப் போகிறது. எனவே எதிலுமே நம்பிக்கை வேண்டும்.
பிரச்சினை என்ன என்பதைக் கண்டறியவும்
உங்களுக்கு பொதுவில் நல்ல நினைவுத்திறன் இருக்கும். ஆனால் சில குறிப்பிட்ட விஷயங்கள் உங்களுக்கு நினைவில் நிற்காமல் போகும். அவற்றை நினைவிற்கு கொண்டு வருவதில் நீங்கள் எப்போதுமே சிரமப்படுவீர்கள். சிலருக்கு, பெயர்கள் மறந்துபோகும். சிலருக்கு இடங்கள் மறந்துபோகும்.சிலருக்கோ, எண்கள் மறந்துபோகும் மற்றும் சிலருக்கு ஆட்களின் முகங்கள் மறந்துபோகும். சிலருக்கு நல்ல விஷய ஞானம் இருந்தும், அவர்களால் ஒரு மேடையில் தமது கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்க இயலாது. சிலருக்கு எவ்வளவு கடினப்பட்டு படித்திருந்தாலும், தேர்வு அறையில் பதில்களை நினைவில் கொண்டுவந்து எழுதுவதில் சிரமம் இருக்கும்.
இத்தகைய குறைபாடுகள் அனைத்திற்கும் பின்னணியில் ஒவ்வொரு காரணம் உண்டு. ஆர்வமின்மை,பதட்டம் மற்றும் புரிந்துகொள்ளாமல் படித்தல் போன்ற காரணங்கள் அவற்றுள் சில. எனவே இவற்றை அறிந்து நாம் சரிசெய்தால், நமது நினைவுத்திறன் குறைபாட்டு பிரச்சினையைத் தீர்க்கலாம்.
நமது மூளையில் ஏகப்பட்ட செய்திகள் உட்புகுவதால், எதை நினைவில் வைக்க வேண்டும் மற்றும் எதை அழித்துவிட வேண்டும் என்ற வரையறையை நாம் உருவாக்க வேண்டும்.
மூளையின் திறனை அறிதல்
மனித மூளையில் இன்னும் கண்டறியப்படாத ஏராளமான எண்ணிக்கையில் சிக்கலான அமைப்புகள் உள்ளன. மனித மூளையானது அளவற்ற விஷயங்களை நினைவில் வைக்கும் திறன் கொண்டது.வேற்றுமொழி பெயர்கள், வருடங்கள், எண்கள் மற்றும் கவிதைகள் உள்ளிட்ட பலவித அம்சங்களை நினைவில் வைத்து, தேவைப்படும்போது உடனடியாக வெளிக்கொணரும் ஆற்றல் உடையது. பல அசாதாரண நினைவாற்றல் உள்ள நபர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நீங்கள் வியந்திருப்பீர்கள்.எனவே, உங்களின் நினைவுத்திறனை மேம்படுத்தினால் நீங்களும் பலரை வியக்க வைக்கலாம்.
No comments:
Post a Comment