"பாகிஸ்தான் மற்றும் வங்கதேச குடியுரிமை பெற்றவர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான, அடையாள அட்டை பெற முடியாது; அதற்காக விண்ணப்பிக்க முடியாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"குடியுரிமை திருத்த சட்ட மசோதா - 2011' கடந்த வாரம், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நேரத்திலோ அல்லது அது செயல்பாட்டிற்கு வந்த பின்னரோ, இந்திய குடிமகனாக இருந்து, பின், வெளிநாட்டில் குடியேறி, அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள், இந்திய குடிமகனாகலாம். அத்துடன், வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான அடையாள அட்டை பெறலாம்; அந்த அட்டை வேண்டிய பதிவு செய்யலாம்.
பாகிஸ்தான் அல்லது வங்கதேச குடியுரிமை பெற்ற மற்றும் மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ள, தடை செய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் யாரும், வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான அடையாள அட்டை பெற முடியாது; அதற்காக விண்ணப்பிக்க முடியாது. இந்திய குடிமகனாக இருந்து, பின் மற்றொரு நாட்டின் குடியுரிமை பெற்றவரின் மனைவியும், வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான அடையாள அட்டை கேட்டு விண்ணப்பிக்கலாம். அவர்களின் திருமணம் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்படும்.
வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான, அடையாள அட்டை பெற்றவர்கள், வேலை வாய்ப்பு, ஜனாதிபதி தேர்தல், துணை ஜனாதிபதி தேர்தல், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் நியமனம் போன்றவற்றில், இந்தியாவில் வசிப்பவர்களைப் போன்ற, அவர்களுக்கு இணையான உரிமை எதையும் கோர முடியாது. அத்துடன், இந்தியாவில் வாக்காளர்களாகவும் பதிவு செய்ய முடியாது; சட்டசபை மற்றும் பார்லிமென்ட் உறுப்பினராகவும் முடியாது.இவ்வாறு சட்ட திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment