ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது,நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல்,கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில்தொடங்கப்பட்டது. எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த தேசங்களின் அணி (League of Nations) என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா 'சமாதான விரும்பி' நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. செப்டெம்பர் 2010 நிலவரப்படி, 192 உறுப்புநாடுகள் இருந்தன. சூலை 9, 2011 இல் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று ஐ.நா வில் இணைந்ததுடன் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன.
நோக்கங்கள்:
• கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்;
• பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்.
• மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல்
• மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.
• இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே.
• உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
• உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது.
ஐக்கிய நாடுகள் முறைமை:
ஐக்கிய நாடுகள் முறைமை 1994 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்வரும் 6 முதன்மை அமைப்புகளைக் கொண்டிருந்தது:
• ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
• ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
• ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
• ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்
• ஐக்கிய நாடுகள் செயலகம்
• அனைத்துலக நீதிமன்றம்
1994 ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் கடைசிப் பொறுப்பாட்சிப் பகுதியான பலோ (Palau) சுதந்திரம் பெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் செயலற்றுப் போனது. இப்போது ஏனைய ஐந்து அமைப்புக்கள் மட்டுமே உள்ளன. இந்த ஐந்து அமைப்புக்களுள் நான்கு நியூ யார்க் நகரில் உள்ள அனைத்துலக ஆட்சிப்பகுதியுள் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் இயங்குகின்றன. அனைத்துலக நீதிமன்றம் ஹேக் நகரில் உள்ளது.
மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த மேலும் சில முக்கியமான அமைப்புக்கள் செனீவா, வியன்னா, நைரோபி போன்ற நகரங்களில் இருந்து இயங்கி வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடைய மேலும் பல அமைப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன.
அரசுகளுக்கு இடையிலான கூட்டங்களிலும், ஆவணங்களிலும் ஆறு மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்பட்டு வருகின்றன. இவை, அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் என்பன. செயலக வேலைகளுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகள் பயன்பட்டு வருகின்றன. ஆறு அலுவல் மொழிகளுள் நான்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தேசிய மொழிகள். இவற்றுக்குப் புறம்பாக, அதிகமான நாடுகளில் தேசிய மொழிகளாக உள்ள எசுப்பானியமும், அரபு மொழியும் அலுவல் மொழிகளாகச் சேர்க்கப்பட்டன. இவற்றுள் எசுப்பானியம் 20 நாடுகளிலும், அரபு மொழி 26 நாடுகளிலும் அலுவல் மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுள் ஐந்து ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட போதே அலுவல் மொழிகளாகத் தெரிவு செய்யப்பட்டன. அரபு மொழி 1973 ஆம் ஆண்டில் அலுவல் மொழியாக்கப்பட்டது. ஐநாவின் கைநூலில் பிரித்தானிய ஆங்கிலமும், ஆக்சுபோர்டு எழுத்துக் கூட்டலுமே ஆங்கிலத்துக்கு நியமமாகச் சொல்லப்படுகின்றன.
எளிமையாக்கிய சீனமே சீன மொழிக்குரிய நியம எழுத்து முறையாகக் கொள்ளப்படுகின்றது. 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமை சீனக் குடியரசிடம் இருந்து,மக்கள் சீனக் குடியரசுக்குக் கைமாறியபோது சீன எழுத்துமுறைக்கான நியமம் மரபுவழிச் சீன எழுத்து முறையில் இருந்து, எளிமையாக்கிய சீன எழுத்து முறைக்கு மாற்றப்பட்டது.
பொதுச் சபை:
பொதுச் சபையே ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான கலந்தாராய்வு அவை ஆகும். எல்லா உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பொதுச் சபை, ஆண்டுக்கு ஒரு முறை, உறுப்பு நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்படும் தலைவர் ஒருவரின் தலைமையில் கூடுகிறது. அமர்வின் தொடக்கத்தில் இரண்டு வாரகாலம் எல்லா உறுப்பு நாடுகளும் அவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மரபுவழியாக பொதுச் செயலர் முதலாவது பேச்சை நிகழ்த்த, அடுத்ததாக அவைத் தலைவர் பேசுவார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் அமர்வு 1946 ஆம் ஆண்டு சனவரி 10 ஆம் தேதி இலண்டனில் இடம்பெற்றது. 51 நாடுகளின் பேராளர்கள் இந்த அமர்வில் பங்குபற்றினர்.
பொதுச் சபை முக்கியமான விடயங்களில் வாக்களிக்கும்போது, அமர்வில் கலந்து கொண்டு வாக்களித்தவர்களுள்மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. மேற்சொன்ன முக்கியமான விடயங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக, அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பான சிபாரிசுகள்; அமைப்புகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்; உறுப்பினர்களை அனுமதித்தல், இடை நிறுத்துதல், வெளியேற்றுதல்; வரவு செலவு விடயங்கள் போன்றவற்றைக் காட்டலாம். பிற விடயங்கள் சாதாரண பெரும்பான்மை மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு உண்டு. வரவு செலவு விடயங்கள் தவிர்ந்த பிற தீர்மானங்கள் உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்துவதில்லை. பாதுகாப்புச் சபையின் கீழ் வரும் அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பானவை தவிர்ந்த பிற விடயங்கள் தொடர்பில் பொதுச் சபை சிபாரிசுகளை வழங்க முடியும்.
பாதுகாப்புச் சபை:
நாடுகளுக்கிடையே அமைதியையும் பாதுகாப்பையும் பேணவேண்டிய பொறுப்பு பொதுச்சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பிற உறுப்புக்கள் உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசுகளை மட்டுமே வழங்க முடிகின்ற அதேவேளை, ஐக்கிய நாடுகள் பட்டயம் 25 ஆவது துணைப் பிரிவின்படி, பாதுகாப்புச் சபைக்கு, உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் உண்டு. இத்தகைய தீர்மானங்கள், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள் என அறியப்படுகின்றன.
பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாகப் 15 நாடுகள் உள்ளன. இவற்றுள் சீனா, பிரான்சு, உருசியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பு நாடுகள். ஏனைய 10ம் தற்காலிக உறுப்பினர். 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இவ்வுறுப்பினர் பிரதேச அடிப்படையில்பொதுச் சபையில் இடம்பெறும் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். பாதுகாப்புச் சபையின் தலைமைப் பதவி ஒவ்வொரு மாதமும் பெயர் அடிப்படையிலான ஆங்கில அகர வரிசைப்படி சுழற்சி முறையில் சபையின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகின்றது. நடைமுறை சார்ந்த தீர்மானங்களைத் தவிர்த்துத் தமக்கு ஏற்பு இல்லாத தனித் தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கக்கூடிய தடுப்பு அதிகாரம் (வீட்டோ) நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு உண்டு. ஆனாலும், இத்தீர்மானங்கள் குறித்த விவாதங்களைத் தடுக்கும் அதிகாரம் கிடையாது.
செயலகம்:
ஐக்கிய நாடுகள் செயலகம், பொதுச் செயலாளரின் தலைமையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிசார் அலுவலர்களின் துணையுடன் இயங்குகின்றது. இது ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்புக்களின் கூட்டங்களுக்குத் தேவையான ஆய்வுகளை முன்னெடுப்பதுடன், தகவல்களையும், பிற வசதிகளையும் வழங்குகிறது. அத்துடன், ஐநா பாதுகாப்புச் சபை, ஐநா பொதுச் சபை, ஐநா பொருளாதார, சமூக அவை ஆகியவையும் பிற ஐநா அமைப்புக்களும் வழங்கும் வேலைகளையும் ஐக்கிய நாடுகள் செயலகம் நிறைவேற்றுகின்றது. பரந்த புவியியல் பகுதிகளிலிருந்தும் வேலைக்கு அமர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டும், உயர்ந்த செயற்றிறன், தகுதி, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலும் செயலகத்தின் அலுவலர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் பட்டயம் கூறுகின்றது.
ஐநா பட்டயத்தின்படி செயலக அலுவலர்கள் ஐநா தவிர்ந்த வேறெந்த அமைப்பிடம் இருந்தும் அறிவுறுத்தல்களை எதிர்பார்க்கவோ, பெற்றுக்கொள்ளவோ கூடாது. உறுப்பு நாடுகள் செயலகத்தின் அனைத்துலகப் பட்டயத்தை மதித்து நடப்பதுடன், செயலகத்தின் அலுவலர்கள் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முயலக்கூடாது. அலுவலர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு பொதுச் செயலாளருக்கு மட்டுமே உரியது.
பொதுச் செயலாளரின் கடமைகளுள், பன்னாட்டுத் தகராறுகளைத் தீர்க்க உதவுதல், அமைதிப்படைச் செயற்பாடுகளை நிர்வகித்தல், அனைத்துலக மாநாடுகளை ஏற்பாடு செய்தல், பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பிலான தகவல்களைச் சேகரித்தல், பல்வேறு முன்னெடுப்புக்கள் குறித்து உறுப்பு நாட்டு அரசுகளுடன் ஆலோசித்தல் போன்றவை அடங்குகின்றன. இவை தொடர்பான முக்கிய அலுவலகங்களுள் மனிதாபிமான அலுவல்கள் ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், அமைதிகாப்புச் செயற்பாட்டுப் பிரிவு அலுவலகம் என்பவை உள்ளன. அனைத்துலக அமைதிக்கு இடையூறாக அமையக்கூடும் என அவர் கருதும் எந்த ஒரு விடயத்தையும், பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவரலாம்.
பொதுச் செயலாளர்:
ஐநா செயலகத்தின் தலைமைப் பொறுப்பில் பொதுச் செயலாளர் உள்ளார். நடைமுறையில், ஐநாவின் பேச்சாளராகவும், முன்னணி நபராகவும் இருப்பவர் இவரே. தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கும் பான் கீ-மூன் 2007 ஆம் ஆண்டில் அப்போதைய பொத்ஜுச் செயலாளரான கோபி அன்னானிடம் இருந்து பதவியைப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் இரண்டாவது முறையும் தெரிவு செய்யப்பட்ட இவர் 2016 ஆண்டின் இறுதிவரை பொறுப்பில் இருப்பார்.
"உலகின் மட்டுறுத்துனர்" என பிராங்க்ளின் ரூசுவெல்ட்டினால் கருதப்பட்ட இப்பதவியை, அமைப்பின் "தலைமை நிர்வாக அலுவலர்" என ஐநா பட்டயம் வரையறுக்கிறது. எனினும், உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடியது எனக் கருதும் எந்த விடயத்தையும் பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்று ஐநா பட்டயம் கூறுவதன் மூலம் உலக அளவில் நடவடிக்கைக்கான பெரிய வாய்ப்பு இப்பதவிக்குக் கிடைக்கிறது. ஐநா அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் அதே வேளை, உறுப்பு நாடுகளிடையேயான தகராறுகள் தொடர்பிலும், உலக விடயங்களில் உறுப்புநாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும், ஒரு இராசதந்திரியாகவும், நடுவராகவும் செயற்படுவதன் மூலம், இப்பதவி ஒரு இரட்டைப் பொறுப்புக்கொண்ட ஒன்றாக உருவாகியுள்ளது.
பொதுச் செயலாளர், ஐநா பாதுகாப்புச் சபையின் பரிந்துரையுடன், பொதுச் சபையினால் தெரிவு செய்யப்படுகிறார். இவ்விடயத்தில் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் தமது தடுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. கோட்பாட்டளவில், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளாமல் விடலாம். ஆனாலும், இந்நிலை இதுவரை ஏற்பட்டதில்லை. இப்பதவிக்கான வரன்முறைகள் எதுவும் கிடையா. எனினும். இப்பதவியை ஐந்தாண்டுகள் கொண்ட ஒன்று அல்லது இரண்டு பதவிக்காலங்களுக்கு ஒருவர் வகிக்கலாம் என்பதும், புவியியற் பகுதி அடிப்படையிலான சுழற்சி முறையில் இப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதும், இப்பதவியில் இருப்பவர் நிரந்தர உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்பதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment