குரூப்-4 தேர்வில் 3 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு : 5,500 இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி
வரும், 25ம் தேதி நடக்க உள்ள, குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பித்த, 17 லட்சம் பேரில், தகுதியில்லாத, 3 லட்சம் பேரின் விண்ணப்பங்களை, டி.என்.பி.எஸ்.சி., நிராகரித்துள்ளது. இறுதியாக, 5,566 இடங்களுக்கு, 14 லட்சம் பேர் போட்டி போடுகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன், நிருபர்களிடம், நேற்று கூறியதாவது: தட்டச்சர், இளநிலை உதவியாளர் போன்ற பணிகளில், குரூப் - 4 நிலையில் உள்ள, 5,566 காலி பணியிடங்களை நிரப்ப, வரும், 25ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 17 லட்சம் பேர், விண்ணப்பித்தனர். எனினும், ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்தது, விண்ணப்ப கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்தாதது போன்ற காரணங்களால், 3 லட்சம் விண்ணப்பங்களும், உரிய தகுதியின்மை காரணமாக, 458 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.
"ஹால் டிக்கெட்' வெளியீடு : இறுதியாக, 14 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். 4,755 தேர்வு கூடங்களில், தேர்வு நடக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, www.tnpsc.gov.in, www.tnscexams.net ஆகிய இணைய தளங்களில், "ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு மையத்தின் அமைவிடத்தை, தேர்வர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், தேர்வு மைய முகவரியுடன், தொலைபேசி எண் மற்றும் பக்கத்தில் உள்ள முக்கியமான,"லேண்ட் மார்க்' இடத்தையும் குறிப்பிட்டுள்ளோம். சரியான முறையில் விண்ணப்பித்தும், "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன், contacttnpsc@gmail.com என்ற, "இ-மெயில்' முகவரிக்கு, 19ம் தேதிக்கு முன், தகவல் தெரிவிக்கலாம்.
950 பறக்கும் படைகள் : தேர்வை கண்காணிப்பதற்கு, தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளோம். 4,755 முதன்மை கண்காணிப்பாளர், 70,230 கண்காணிப்பாளர், 4,500 ஆய்வு அலுவலர், 950 பறக்கும் படை அதிகாரி ஆகியோர், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். அனைத்து தேர்வு மையங்களிலும், வீடியோ பதிவு நடக்கும். மேலும், பதட்டமான தேர்வு மையங்கள், "ஆன்-லைன்' வழியாக, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், தேர்வாணைய தலைமை அலுவலகத்திலும், தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேர்வு மையத்திற்கு, மொபைல் உள்ளிட்ட எந்த ஒரு மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்ல, அனுமதி இல்லை. விதிமுறைகளை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் கூறினார்.
No comments:
Post a Comment