Monday 11 March 2013

செஞ்சிலுவை சங்கம்


போர் நடந்தாலும், இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் நிகழ்ந்தாலும் அங்குள்ள மக்களோடு இணைந்து பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவச் சேவையாற்றும் சர்வதேச அமைப்பான  செஞ்சிலுவை சங்கத்துக்கு 150 வயது ஆகிறது.

விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் பிறந்தவர் ழான் ஹென்றி டூனன்ட். பிரான்சின் ஆளுகைக்குட்பட்டிருந்த அல்ஜீரிய நாட்டில் வணிகம் செய்வதற்கு அனுமதி வேண்டி, இத்தாலி வழியாக பிரான்ஸ் மன்னர் மூன்றாம் நெப்போலியனை சந்திக்க சென்றார் ஹென்றி டூனன்ட். 1859-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி வடக்கு இத்தாலியிலுள்ள சோல்பெரினோ என்ற இடத்தில்,  பிரான்ஸ் மற்றும் சார்டீனீயாவின் கூட்டுப் படைகளுக்கும், அப்பகுதியைக் கைப்பற்றியிருந்த ஆஸ்திரியப் படைகளுக்கும் இடையே கடும் போர் மூண்டது. ஒரு நாளில் நடைபெற்ற அப்போரில் சுமார் 15 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர். 25 வீரர்கள் படுகாயமடைந்தனர். இப்போரின் கொடூரத்தைக் கண்ட ஹென்றி, தான் வந்த நோக்கத்தை மறந்து, போரில் காயம்பட்ட வீரர்களுக்கு அப்பகுதி மக்களைக் கொண்டே சிகிச்சைகளை அளித்தார். சில மாதங்களுக்குப் பிறகு தனது நாட்டிற்குத் திரும்பினர்.

இந்தப் போரினால் ஏற்பட்ட கொடூரங்களை மையமாக வைத்து ‘சோல்பெரினோவின் நினைவுகள்’ என்ற புத்தகத்தை எழுதி, தனது சொந்தச் செலவில் அச்சடித்து, 1862-ல், ஐரோப்பா முழுவதும் இருந்த அரசர்கள், அரசியல் தலைவர்கள், படைத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். அப்புத்தகத்தில் போரினால் வீரர்களுக்கு ஏற்படும் ஊனத்தையும், காயத்தையும் சரி செய்ய தேசிய அளவிலான மருத்துவக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், அம்மருத்துவக்குழு போரில் ஈடுபட்டு காயமுற்ற அனைத்துப் பிரிவினருக்கும் வேறுபாடின்றி மருத்துவம் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். அதைப்படித்த அனைவரும் ஹென்றி டூனன்ட்டின் கருத்தினை ஆதரித்தனர்.

1863-ஆம் ஆண்டு, பிப்ரவரி 9-ஆம் தேதி, ஜெனீவாவில் ஐவர் கொண்ட குழுவை ஹென்றி டூனன்ட் அமைத்தார். இந்தக் குழுவிற்குக் ‘ஜெனீவா சோஸைட்டி ஃபார் பப்ளிக் வெல்ஃபேர்’ (Geneva Society for Public Welfare)  என்று பெயரிடப்பட்டது. இக் குழுவின் தலைவர் குஸ்டவ் மொனிர்.  ஹென்றி டூனன்ட் உள்ளிட்ட நால்வர் இக்குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த குழு அமைக்கப்பட்டு எட்டு நாள்கள் கழித்து, ‘இன்டர்நேஷனல் கமிட்டி ஃபார் ரிலீப் டு தி வவுண்டட்’ என பெயர் மாற்றப்பட்டது.

ஹென்றி டூனன்ட் வலியுறுத்திய மருத்துவ சேவை ஆற்றக்கூடிய சர்வதேச அமைப்பு ஒன்றை நிறுவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அதற்கேற்றபடி செயல்படுவதே இக்குழுவின் நோக்கம். போர் நடைபெறும் இடங்களில் மருத்துவச் சேவை ஆற்றுவது குறித்த சர்வதேச மாநாடு ஜெனீவாவில்  1863-ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது. பிரான்ஸ், பிரிட்டன், நெதர்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு தேசிய அளவில் ஒரு அமைப்பு ஏற்படுத்துவது, போரினால் பாதிக்கப்பட்ட வீரர்களை பாரபட்சமின்றி பாதுகாப்பது, தன்னார்வத்துடன் வரும் பொதுமக்களைக் கொண்டு போரில் காயம்பட்டவர்களுக்கு சேவை செய்வது உள்ளிட்ட  பாரபட்சமின்றி  உதவி செய்யும் இந்த அமைப்பினைப் பாதுகாக்க, தனி அடையாளத்தை (செஞ்சிலுவைச் சின்னம்) உருவாக்குவது போன்ற தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

1864-ஆம் ஆண்டில் ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில், இதற்கென சர்வதேச அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பிரகடனத்தில் பல நாடுகள் கையெழுத்திட்டன.

இம்மாநாட்டின் முடிவில் இந்த அமைப்பிற்கான சின்னமும் உருவாக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. ஹென்றி டூனன்ட் பிறந்த ஸ்விட்சர்லாந்து நாட்டின் கொடி அமைப்பை ஒட்டியே இச்சின்னமும் உருவாக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. இக்கொடியில் கூட்டல்குறி வெண்மை நிறத்திலும், இதன் பின்னணி நிறம் சிவப்பிலும் அமைந்திருக்கும். இதன் நிறங்களை மட்டும் மாற்றி, வெள்ளை நிறப்பின்னணியில் சிவப்பு நிறக் கூட்டல் குறியில் அமைந்த சிலுவைச் சின்னம் உருவாக்கப்பட்டது.

பல்வேறு சர்வதேசக் கூட்டங்களுக்குப் பிறகு இந்த அமைப்பினை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டன. 1876-ல் இந்தக் குழுவின் பெயர், ‘சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்’ (International Committee of the Red Cross - ICRC) என மாற்றம் பெற்றது.

மொழி, நிறம், இனம், நாடு என எந்தவித பாரபட்சமுமின்றி மனிதாபிமானத்தோடு உதவி, ஒத்தாசை புரிய வேண்டும் எனும் ஆவலினால் உந்தப்பட்டு, எங்கெல்லாம் மனிதருக்கு துன்பம் நேர்கிறதோ, அங்கெல்லாம் நேரில் சென்று பணிபுரிய, பாதிப்புகளைத் தடுக்க அல்லது அவற்றின் பரிமாணத்தைக் குறைக்க தேசிய, சர்வதேச அளவில் செஞ்சிலுவை இயக்கம் பாடுபட்டு வருகிறது. உயிர், உடல், நலம் என்பவற்றைப் பாதுகாப்பதும், மனித கௌரவம் பேணப்படுவதை உறுதி செய்வதுமே இச்சங்கத்தின் பிரதான நோக்கமாகும். உலக மக்களின் மத்தியில் புரிந்துணர்வை வளர்த்து நட்புறவு, கூட்டுறவு என்பவற்றை நிலைபெறச் செய்து நிரந்தர சமாதானத்தைக் கட்டி எழுப்புவது அதன் குறிக்கோள்களாகும். மனிதநேயம், பாரபட்சமின்மை நடுநிலைமை தொண்டர் சேவை, ஒருமைப்பாடு, சுயாதீனம், சர்வதேச மயம் என்ற ஏழு முக்கியக் கொள்கைகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்படும் சேவைகளை உணர்ந்த இஸ்லாமிய நாடுகள் விடுத்த வேண்டுகோளின்படி, 1876 -ஆம் ஆண்டில் இதே சேவையின் அடிப்படையில் செம்பிறையை அடையாளச் சின்னமாகக் கொண்ட சங்கம் உருவாக்கப்பட்டது. உலகின் ஏனைய நாடுகளில் செஞ்சிலுவைச் சங்கம் செய்து வரும் சேவையை இஸ்லாமிய நாடுகளில் செம்பிறை என்ற சின்னத்தின்கீழ் இயங்கும் சங்கமும் செய்து வருகிறது.

 1870-களுக்குப் பிறகு போர் நடக்கும்  இடங்களுக்கு மாட்டு வண்டி, குதிரை வண்டி என எப்படியெல்லாம் அங்கு செல்ல முடியுமோ, அப்படிச் சென்று சேவையாற்றியது. மேலும், முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது இச்சங்கம் ஏராளமான  மனித உயிர்களைக் காப்பாற்றியது.

ஜெனீவா உடன்படிக்கையில் செஞ்சிலுவைச் சின்னத்தை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. இதனை ஒரு பாதுகாப்பு அடையாளமாக செஞ்சிலுவைச் சங்கத்தினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். யாரும் இந்தச் சின்னத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கான விதிமுறைகளை 1949 -ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஜெனீவா உடன்படிக்கையில் ஏற்படுத்தப்பட்டன.  போர்களின் போது மட்டுமே செஞ்சிலுவை அடையாளத்தை ராணுவ சிகிச்சைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சீருடையில் பயன்படுத்தலாம். மருத்துவமனைகளிலும் சிகிச்சைப் பிரிவுகளிலும் இதனைப் பயன்படுத்த அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

முதலாம் உலகப் போர் முடிந்த பிறகு 1920- ஆம் ஆண்டு, ஜூன் 7 ஆம் தேதி, 50 உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியாவில் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராக சர் வில்லியம் மால்கம் ஹெலி செயல்பட்டார். இந்தியப் பள்ளிகளில் இளஞ்சிறார் செஞ்சிலுவைச் சங்கமும் (Junior Redcross), கல்லூரிகளில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கமும் (Youth Red cross) செயல்பட்டு வருகின்றன. குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோதும், இந்திய கடற்கரைப்பகுதிகளை சுனாமி தாக்கிய போதும் செஞ்சிலுவைச் சங்கம் மகத்தான சேவைகளைச் செய்தது. இதுபோல் ஒவ்வொரு நாட்டிலும்  செஞ்சிலுவைச் சங்கம் செய்து வரும் பணிகள் அளப்பரியவை.


அமைதிப் பணிக்கு நோபல் பரிசு
சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பது ஓர் ஆயுதப் போரின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சட்ட விதிமுறைகள் ஆகும். இவை போர்ச் சட்டங்கள் என்றும் அறியப்படுகின்றன. இந்தச் சட்டங்கள் சண்டையில் ஈடுபட்டிருக்கும் நாடுகள், நடுநிலை நாடுகள், மற்றும் தனிநபர்கள் ஆகியோரது நடத்தைகளையும் பொறுப்புகளையும் வரையறை செய்கின்றன. பொதுமக்களை தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். இச்சட்டம் உருவாவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்தை உருவாக்கிய ஹென்றி டூனன்ட் முக்கியக் காரணியாக இருந்தார். 1901-ல் முதல் முதலாக வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் டூனன்ட்.

No comments:

Post a Comment