Sunday 24 February 2013

சோடியத்தின் கதை!


சோடியத்தின் கதை!

சோடியம் ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு Na. இதன் அணு எண்11. இது மென்மையான, வெண்ணிறமான தனிமம் ஆகும். சோடியம் மிகுந்த வினைத்திறன் கொண்ட தனிமம். இது காற்றில் விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது. எனவே இதைத் தடுக்க மந்தமான சூழலில் குறிப்பாக மண்ணெய்க்குள் வைக்கப் படுகிறது. சோடியம்கடலில் சோடியம் குளோரைடு என்னும் சேர்மமாக அதிக அளவில் கிடைக்கிறது. இது விலங்கினங்களுக்கு தேவையான ஒரு முக்கியக்கனிமம் ஆகும். பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கக் கூடிய
தனிமங்களுள் ஆக்சிஜன், சிலிகான், அலுமினியம், இரும்பு,கால்சியத்திற்கு அடுத்து சோடியம் ஆறாவது செழுமை மிக்க தனிமமாக உள்ளது. நிறையின் அடிப்படையில் 2.83 விழுக்காடு சோடியமாகும். இயற்கையில் சோடியம் ஒருபோதும் தனித்துக் காணப்படுவதில்லை. உப்புக்களாகவே கிடைக்கின்றது. உப்புப் பாறையாக பூமியில் பல இடங்களில் கிடைக்கிறது. பல உப்பு நீர் ஏரிகளிலும், சுனை, ஊற்றுக்களிலும் கூட சோடியம் குளோரைடு மிகுதியாகக் கரைந்திருக்கிறது.
கண்டு பிடிப்பு
1807 ல் இங்கிலாந்து நாட்டின் சர் ஹம்பிரி டேவி என்பார் சோடியத்தைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். தெவிட்டிய கரைசலில் நீர், உப்பின் சிதைவைத் தடை செய்கிறது என்பதால் மூலப் பொருள் இருந்தும் அதைப் பகுக்க முடிவதில்லை. இதனால் டேவி முதலில் நீர் மூலக்கூறு சோடாவை உருக்கி சோடியம் ஹைட்ராக்சைடைப் பெற்று, அதிலிருந்து மின்னாற் பகுப்பு மூலம் சோடியத்தைப் பிரித்தெடுத்தார். சோடியம் குளோரைடை எளிதில் உருக்குவதற்கு அதனுடன் 50 விழுக்காடு கால்சியம் குளோரைடையும் சேர்த்து, செங்கல் வரியிட்ட இரும்புத் தொட்டியில் மின்னாற் பகுப்பு மூலம் சோடியத்தைப் பெறமுடியும். சோடியம் குளோரைடின் உருகு நிலை 1077 K (804ºC),கால்சியம் குளோரைடைச் சேர்ப்பதால் கலவை 853 K (580ºC) வெப்ப நிலையிலேயே உருகி விடுகிறது.
இலத்தீன் மொழியில் நாட்ரியம் என்பது ஆங்கிலத்தில் சோடாவானது. சோடாவிலிருந்து பெறப் பட்டதால் இது சோடியம் என்ற பெயர் பெற்றது. இதன் வேதிக் குறியீடு Na ஆகும். சோடியம் புதியதாக இருக்கும் போது மென்மையாகவும், மெழுகு போன்ற தோற்றமும், வெள்ளி போன்று பளபளப்பும் கொண்ட திண்மமாக இருக்கிறது. ஆனால் காற்று வெளியில் ஆக்சிஜனேற்றம் பெற்று ஓர் ஆக்சைடு படலம் அதன் மீது படிந்து அதன் பொலிவை மங்கச் செய்து விடுகிறது.சோடியம் வறண்ட காற்று வெளியில் மிதமான வெப்ப நிலையில் நிலையானது. ஆனால் காற்றை 120 டிகிரி செ. வெப்ப நிலைக்குச் சூடு படுத்தும் போது சோடியம் தீப்பற்றிக் கொள்கிறது.
பண்புகள்
சோடியம், நீரோடு தீவிரமாக வினை புரிந்து தீயையும், வெடிச் சத்தத்தையும் எழுப்புகின்றது. இதனால் சோடியத்தால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு நீர் பாதுகாப்பளிப்பதில்லை. இதற்கு உலர் உப்புத் தூள், உலர் சோடா, உலர் கிராபைட் தூள் போன்றவற்றை நீருக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். ஈரக் காற்று வெளியிலோ நீரிலோ சோடியம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதால் சோடியத்தை பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் அல்லது பென்சீன் போன்ற ஆக்சிஜனற்ற நீர்மங்களில் அமிழ்த்தி வைத்திருப்பார்கள். சோடியம் ஒரு சிறந்த வெப்பக் கடத்தியாகும். இதன் வெப்ப ஏற்புத்திறன் நீரின் மதிப்பில் ஏறக்குறைய 3 ல் 1 பங்கு. இப் பண்பு சோடியத்தை அணு உலைகளில் ஒரு குளிர்விப்பானாக பயன்படுத்த ஏற்புடையதாயிருக்கிறது. இதன் அணு எண் 11, அணு நிறை 22.99, அடர்த்தி 970 கிகி /கமீ. உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 370.9 K (98ºC), 1156 K (883ºC) ஆகும். இது ஒரு கார உலோகமாகும். இதன் இணை திறன் 1 ஆக உள்ளது.

பயன்கள்

கரிம வினைகளில் சோடியம் செரிவித்தலுக்கும், தொகுப்பாக்கத்திற்கும் ஆக்சிஜனிறக்கத்திற்கும் பயன் படுகிறது. பெட்ரோல் என்ஜின்களில் இயக்கத் திறனைச் செம்மைப்படுத்த உதவும் டெட்ரா ஈதைல் ஈயம் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் வழி முறையில் சோடியம் பெரும் பங்கேற்றுள்ளது.[9]சோடியம் தந்த பயன்களுள் மற்றொன்று சோடிய ஆவி விளக்காகும். சோடிய ஒளி ஒற்றை நிறங்கொண்டது. சோடியத்தின் மஞ்சள் நிற ஒளி, காற்றின் ஈரத்தாலும், மூடுபனியாலும் குறைவாகவே உள்ளுறிஞ்சப் படுவதால் நெடுந் தொலைவு ஒளி பரவுகிறது. இதனால் குளிர் மிகுந்த இரவிலும், பனிமழை பெய்யும் காலங்களிலும் சோடிய ஒளியால் தெருக்களைத் தெளிவாகப் பார்க்க முடியும்.[10] சோடிய ஒளி விளக்குகள் சோதனைக் கூடங்களில் ஒருபடித்தர விளக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. சோடியம் ஒளி மின் விளைவினால் ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்கிறது. சோடியம் கட்புலனறி ஒளிக்கு மட்டுமின்றி புறஊதாக் கதிர்களுக்கும் ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்வதால், இது ஒளியியல் கருவிகளில் ஒளிச் செறிவை மதிப்பிடப் பயன்படுகிறது. சோடியமும் பாதரசமும் சேர்ந்த இராசக் கலவை ஆக்சிஜனிறக்க ஊக்கியாகப் பயன்படுகிறது. இதை நீரோடு சேர்க்கும் போது உடனடியாக ஹைட்ரஜனை வெளிப்படுத்துகிறது. இப்பண்பு டைட்டானியம், ஸிர்கோனியம் போன்றவற்றை அவற்றின் டெட்ரா குளோரைடுகளிலிருந்து பிரித்தெடுக்க உறுதுணையாக விளங்குகிறது.

No comments:

Post a Comment