"எறையூரில், பழமை வாய்ந்த,
சிதைந்த நிலையில் உள்ள சிவன் கோவில்
கல்வெட்டில், திண்டிவனம் வரை,
பாண்டியன் ஆட்சி நடந்துள்ளது
என்பதற்கான ஆதாரம் உள்ளது' என, கல்வெட்டு களப் பணியாளர்,வீரராகவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே, எறையூர்
கிராமத்தில், சிவன் கோவில் ஒன்று சிதைந்துள்ளது. 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலைப்
பற்றி, பிச்சைப்பிள்ளை என்பவர் அளித்த தகவலையடுத்து, விழுப்புரம், கல்வெட்டு
களப்பணியாளர்கள் வீரராகவன், மங்கையர்க்கரசி ஆகியோர், ஆய்வு செய்தனர்.
கோவிலின் நிலைப்பாடுகள் குறித்து, கல்வெட்டு
களப்பணியாளர் வீரராகவன் கூறியதாவது:பல ஆண்டுகளாக இக்கோவில், கவனிப்பாரின்றி
கிடந்தது. சமீபத்தில், ஆன்மிகவாதிகள் ஒன்று கூடி, புதர் மற்றும் மண் மேட்டை அகற்றி, கோவிலை
சீரமைத்தனர்.இதைத் தொடர்ந்து,
கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்து
வருகிறது. இந்த கோவிலுக்குள்,
கட்டட கற்கள் சரிந்து விழுந்து, ஆபத்தான நிலையில்
உள்ளன.ஆய்வின் போது, கல்வெட்டு ஒன்றை மைப்படிவம் எடுத்து படித்ததில், இது, பாண்டியர் காலத்து
கல்வெட்டு என, தெரியவந்தது.இக்கல்வெட்டு, மங்கல சொல்லுடன், ஸ்ரீஸ்வஸ்தி என, ஆரம்பமாகிறது. இது,மூன்று
புவனத்துக்கும் சக்கரவர்த்தியான வீரபாண்டிய தேவரின், கி.பி., 1345 ஆட்சியாண்டு கல்வெட்டாகும்.
இந்த கோவிலில் உள்ள இறைவன், தவநெறி ஆளுடைய
நாயனார் என்றும், இவ்வூர் இளநல்லூர் என்றும் கல்வெட்டு கூறுகிறது. அன்றைய இளநல்லூர், இன்றைய எறையூர் ஆக
அழைக்கப்படுகிறது.இந்தக் கோவிலுக்கு கிழக்கே உள்ள மதகு, "மதுராந்தகன் மதகு' என்று அழைக்கப்பட்டு
வந்தது. மேலும், மக்களிடம் இருந்து,
வசூலிக்கும் வரிகள் மூலம், இந்த கோவிலில்
வழிபாடுகள் செய்ததை, கல்வெட்டு கூறுகிறது. வீரபாண்டியன் கல்வெட்டுகள், தமிழகத்தில், விருத்தாசலம்
அருகேவுள்ள, எறும்பூர், கடலூர் அருகே உள்ள திருவஹிந்திபுரம் வரை, கிடைத்து வந்ததை, வரலாற்று அறிஞர்கள்
கூறியுள்ளனர்.தற்போது, எறையூரில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட, இந்த கல்வெட்டு, வீரபாண்டியனின்
ஆட்சி, திண்டிவனம் வரையிலும் இருந்ததற்கு சான்றாக உள்ளது.வரலாற்று சிறப்பு
மிக்க, சிதைந்துள்ள, இக்கோவிலை, இப்பகுதி பக்தர்கள் வழிபட, இந்து அறநிலைய துறையும், தொல்லியல் துறையும், அரசிடம்
நிதிப்பெற்று திருப்பணி செய்து சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment