குறிப்பாக வறட்சிக் காலங்களில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களின் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது குறித்து அரசு திட்டமிட்டது. அதையடுத்து, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டு, 2006ல் அமல்படுத்தப்பட்டது.
அதன்படி, கிராமப் பகுதிகளில் இருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட உடல் உழைப்பு செய்யத் தகுதியாக இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். ‘கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புச்சட்டம்’ (The National Rural Employment Guarantee Act - 2005) மூலம் கிராமப்புறங்களில் இருக்கும் பொதுப்பணிகளை, அப்பகுதிகளில் உள்ள மக்களைக் கொண்டே செயல்படுத்தி நிறைவேற்றிக்கொள்ள இச்சட்டம் வழிவகை செய்தது. இந்தப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குத் தகுந்த ஊதியமும் வழங்க வழிவகை செய்யப்பட்டது. இத்திட்டம் உருவானதில் பெல்ஜிய நாட்டில் பிறந்து, ‘தில்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்’ கல்வி நிலையத்தில் பணியாற்றி வரும் பொருளாதார நிபுணரான டாக்டர். ழான் டிரீஸுக்கு முக்கியப் பங்குண்டு.
வேலைவாய்ப்பு அட்டை:
இத்திட்டத்தின்படி, கிராமத்தில் உள்ள 18 வயதிற்கும் மேற்பட்டோர், அங்குள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்களது முழு விவரங்களைக் கொடுத்து, அதற்கான ஆதாரங்களையும் (குடும்பநல அட்டை, வாக்காளர் அட்டை) சமர்ப்பிக்க வேண்டும். கிராமப் பஞ்சாயத்து அலுவலகம் மூலம் ‘விண்ணப்பதாரர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவரா, அவர் வேலையின்றி இருக்கிறாரா, வேலை செய்வதற்கு உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பனவற்றையெல்லாம் ஆய்வு செய்து, புகைப்படத்துடன் கூடிய, ‘வேலை வாய்ப்பு அட்டை’ (JOB CARD)வழங்கப்படும். இந்த அட்டையை வைத்திருப்பவர்களே இப்பணிகளைச் செய்யத் தகுதியானவர்கள். மேலும், இத்திட்டத்தில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, அவர்களின் பெயர்களை பதிவு செய்த, 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும்.
அதிகாரப் பகிர்வு:
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பொதுத்துறை சார்ந்த பணிகளான ஆறு, ஏரி, குளம், கண்மாய், கால்வாய் போன்றவற்றை சீர்திருத்துதல், பராமரித்தல், சாலைகளை செப்பனிடுதல் போன்ற பணிகளை அப்பகுதி மக்களைக் கொண்டே செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியரின்கீழ் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்பணிகளை மேற்பார்வையிடுவார்கள். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களிடம் இப்பணிகள் ஒப்படைக்கப்படும். அதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்களிடம் இப்பணிகள் வழங்கப்படும். கிராமத்திற்கு வெளியே இத்திட்டத்தின்கீழ், கிராமத்தில் 5 கி.மீ. சுற்றுப்பகுதிகளில் இருக்கும் பொதுப்பணித்துறை வேலைகளைச் செய்யலாம். 5 கி.மீ. தூரத்திற்கு வெளியே சென்று பணிகள் செய்யவேண்டியிருந்தால் ஒரு நாள் ஊதியத்தில் 10 சதவீதம் கூடுதலாகத் தர வேண்டும். இப்படித்தான் இந்த வேலைவாய்ப்புத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டத்தின் வரையறை:
இத்திட்டத்தின்கீழ் பணியாற்றுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாக இருக்க வேண்டும். பணி நேரத்தில் அவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும். ஒப்பந்ததாரர்களைக் கொண்டோ,இயந்திரங்களைக் கொண்டோ பணி செய்யக் கூடாது. வார இறுதி நாளில் ஊதியத்தை பயனாளிகளிடம் வழங்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பணிகளை செய்து கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டு ஊனமுற்றாலோ, மரணமடைந்தாலோ அதற்கு தகுந்தாற் போல ரூ.25 ஆயிரத்துக்கு குறையாமல் நிதி உதவி வழங்க வேண்டும் என்று இத்திட்டத்திற்கென இயற்றப்பட்ட சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது.
ஊதிய நிலவரம்:
இத்திட்டத்திற்கான சட்டமுன்வடிவில் ஒரு நாளைக்கான ஊதியம் ரூ. 155 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு மாநிலங்களில் தனிநபருக்கான குறைந்தபட்ச ஒருநாள் ஊதிய விகிதத்தில் வேறுபாடுகள் இருந்ததால் ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 2005-ஆம் ஆண்டில், ஒரு நாள் பணிக்கான ஊதியம் ரூ.100 ஆக நிர்ணயிக்கபட்டிருந்தது. 2009-ஆம் ஆண்டு விலை நிலவரப்படி ஒருநாள் வேலைக்கு ஊதியமாக ரூ.120 வழங்கப்பட்டது. தற்போதைய விலை நிலவரப்படி ஒருநாளைக்கான ஊதியம் ரூ.132 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு:
2006-ல் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம், இந்தியா முழுவதிலுமுள்ள 200 மாவட்டங்களில், 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று இந்தத் திட்டம் ‘மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டத்திற்காக 2008-09ல் ரூ.30 ஆயிரம் கோடியும், 2009-10ல் ரூ.39 ஆயிரம் கோடியும், 2010-11-ல் ரூ.40 ஆயிரத்து நூறு கோடியும், 2011-12ல் ரூ 40 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2011-12ஆம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்த நிதியில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டதால், 2012-13ல் ரூ. 33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயனாளிகள் புள்ளிவிவரம்:
இத்திட்டம் முதன்முதலாக 2006-07ல் கோவா தவிர்த்து மீதமுள்ள 27 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது. அந்த நிதியாண்டில் 2,10,16,099 குடும்பங்கள் பயனடைந்தன. 2007-08ல் 3,39,09,132 குடும்பங்கள் பயனடைந்தன. 2008-09ல் கோவா உள்ளிட்ட 28 மாநிலங்களிலும், தில்லி தவிர்த்து மீதமுள்ள 6 யூனியன் பிரதேசங்களிலும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டில் 4,51,15,358 குடும்பங்கள் பயனடைந்தன. 2009-10ல் 5,25,30,453 குடும்பங்கள் பயனடைந்துள்ளன. 2010-11ல் 5,49,54,225 குடும்பங்கள் பயனடைந்துள்ளன. 2011-12ல் 4,98,62,775 குடும்பங்கள் பயனடைந்துள்ளன. நடப்பு நிதியாண்டில் (ஜனவரி 2013 நிலவரப்படி) 4,24,77,807 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது.
இத்திட்டம் எப்படி செயல்படுகிறது?:
இந்தத் திட்டத்தின் நிதி, தவறாக பயன்படுத்தப் படுவதாகவும், ஊழல் நடப்பதாகவும் புகார்கள் வருகின்றன. இத் திட்டத்தின் செயல்பாடுகளை, உரிய கால இடைவெளியில், தணிக்கை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. நவீன தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம், இந்தத் தவறுகளைக் களைய முடியும்.
இத்திட்டத்தின்கீழ் வேலை செய்பவர்களுக்கு முழு ஊதியமும் வழங்கப்படவில்லை என்றும், தினமும் ரூ.70 முதல் 80 வரையில்தான் ஊதியம் வழங்கப் படுகிறதென்றும் சில கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். ‘பயனாளிகள் சரியாக பணிகளைச் செய்வதில்லை. வேலை செய்வதில் ஏமாற்றுகின்றனர். ஆதலால், செய்த வேலைக்கேற்ப ஊதியம் வழங்குகிறோம்’ என்கிறது பஞ்சாயத்து தரப்பு. நூறு நாள் வேலைத் திட்டத்தினால் கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளைச் செய்வதற்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகள் இருந்த போதிலும்கூட, கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் மக்களின் குறைந்தபட்ச வருவாய்க்கு உத்தரவாதம் செய்வதிலும், கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்வதைத் தடுப்பதிலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதே இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதாக உள்ளது.
No comments:
Post a Comment