Monday, 11 March 2013

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்




குறிப்பாக வறட்சிக் காலங்களில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களின் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது குறித்து அரசு திட்டமிட்டது. அதையடுத்து, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டு, 2006ல் அமல்படுத்தப்பட்டது.

அதன்படி, கிராமப் பகுதிகளில் இருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட உடல் உழைப்பு செய்யத் தகுதியாக இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். ‘கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதே  இத்திட்டத்தின் நோக்கம்’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புச்சட்டம்’ (The National Rural Employment Guarantee Act - 2005) மூலம் கிராமப்புறங்களில் இருக்கும் பொதுப்பணிகளை, அப்பகுதிகளில் உள்ள மக்களைக் கொண்டே செயல்படுத்தி நிறைவேற்றிக்கொள்ள இச்சட்டம் வழிவகை செய்தது. இந்தப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குத் தகுந்த ஊதியமும் வழங்க வழிவகை செய்யப்பட்டது. இத்திட்டம் உருவானதில் பெல்ஜிய நாட்டில் பிறந்து, ‘தில்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்’ கல்வி நிலையத்தில் பணியாற்றி வரும் பொருளாதார நிபுணரான டாக்டர். ழான் டிரீஸுக்கு முக்கியப் பங்குண்டு.

வேலைவாய்ப்பு அட்டை:

இத்திட்டத்தின்படி,  கிராமத்தில் உள்ள 18 வயதிற்கும் மேற்பட்டோர், அங்குள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்களது முழு விவரங்களைக் கொடுத்து, அதற்கான ஆதாரங்களையும் (குடும்பநல அட்டை, வாக்காளர் அட்டை) சமர்ப்பிக்க வேண்டும். கிராமப் பஞ்சாயத்து அலுவலகம் மூலம் ‘விண்ணப்பதாரர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவரா, அவர் வேலையின்றி இருக்கிறாரா, வேலை செய்வதற்கு உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பனவற்றையெல்லாம் ஆய்வு செய்து, புகைப்படத்துடன் கூடிய, ‘வேலை வாய்ப்பு அட்டை’ (JOB CARD)வழங்கப்படும். இந்த அட்டையை வைத்திருப்பவர்களே இப்பணிகளைச் செய்யத் தகுதியானவர்கள். மேலும், இத்திட்டத்தில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, அவர்களின் பெயர்களை பதிவு செய்த, 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும்.

அதிகாரப் பகிர்வு:

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பொதுத்துறை சார்ந்த பணிகளான ஆறு, ஏரி, குளம், கண்மாய், கால்வாய் போன்றவற்றை சீர்திருத்துதல், பராமரித்தல், சாலைகளை செப்பனிடுதல் போன்ற பணிகளை அப்பகுதி மக்களைக் கொண்டே செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியரின்கீழ் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்பணிகளை மேற்பார்வையிடுவார்கள். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களிடம் இப்பணிகள் ஒப்படைக்கப்படும்.  அதையடுத்து,  அப்பகுதியில் உள்ள மக்களிடம்  இப்பணிகள் வழங்கப்படும். கிராமத்திற்கு வெளியே இத்திட்டத்தின்கீழ், கிராமத்தில் 5 கி.மீ. சுற்றுப்பகுதிகளில் இருக்கும் பொதுப்பணித்துறை வேலைகளைச் செய்யலாம். 5 கி.மீ. தூரத்திற்கு வெளியே சென்று பணிகள் செய்யவேண்டியிருந்தால் ஒரு நாள் ஊதியத்தில் 10 சதவீதம் கூடுதலாகத் தர வேண்டும். இப்படித்தான் இந்த வேலைவாய்ப்புத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் வரையறை:

இத்திட்டத்தின்கீழ் பணியாற்றுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாக இருக்க வேண்டும். பணி நேரத்தில் அவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும். ஒப்பந்ததாரர்களைக் கொண்டோ,இயந்திரங்களைக் கொண்டோ பணி செய்யக் கூடாது. வார இறுதி நாளில் ஊதியத்தை பயனாளிகளிடம் வழங்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பணிகளை செய்து கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டு ஊனமுற்றாலோ, மரணமடைந்தாலோ அதற்கு தகுந்தாற் போல ரூ.25 ஆயிரத்துக்கு குறையாமல் நிதி உதவி வழங்க வேண்டும் என்று இத்திட்டத்திற்கென இயற்றப்பட்ட சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஊதிய நிலவரம்:

இத்திட்டத்திற்கான சட்டமுன்வடிவில் ஒரு நாளைக்கான ஊதியம் ரூ. 155 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு மாநிலங்களில் தனிநபருக்கான குறைந்தபட்ச ஒருநாள் ஊதிய விகிதத்தில் வேறுபாடுகள் இருந்ததால் ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 2005-ஆம் ஆண்டில், ஒரு நாள் பணிக்கான ஊதியம் ரூ.100 ஆக நிர்ணயிக்கபட்டிருந்தது. 2009-ஆம் ஆண்டு விலை நிலவரப்படி ஒருநாள் வேலைக்கு ஊதியமாக ரூ.120 வழங்கப்பட்டது. தற்போதைய விலை நிலவரப்படி ஒருநாளைக்கான ஊதியம் ரூ.132 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு:

2006-ல் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம், இந்தியா முழுவதிலுமுள்ள  200 மாவட்டங்களில், 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பித்து  வைக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று இந்தத் திட்டம் ‘மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டத்திற்காக 2008-09ல் ரூ.30 ஆயிரம் கோடியும், 2009-10ல் ரூ.39 ஆயிரம் கோடியும், 2010-11-ல் ரூ.40 ஆயிரத்து நூறு கோடியும், 2011-12ல் ரூ 40 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2011-12ஆம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்த நிதியில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டதால், 2012-13ல் ரூ. 33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயனாளிகள் புள்ளிவிவரம்:

இத்திட்டம் முதன்முதலாக 2006-07ல் கோவா தவிர்த்து மீதமுள்ள 27 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது. அந்த நிதியாண்டில் 2,10,16,099 குடும்பங்கள் பயனடைந்தன. 2007-08ல் 3,39,09,132 குடும்பங்கள் பயனடைந்தன. 2008-09ல் கோவா உள்ளிட்ட 28 மாநிலங்களிலும், தில்லி தவிர்த்து மீதமுள்ள 6 யூனியன் பிரதேசங்களிலும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டில் 4,51,15,358 குடும்பங்கள் பயனடைந்தன. 2009-10ல் 5,25,30,453 குடும்பங்கள் பயனடைந்துள்ளன. 2010-11ல் 5,49,54,225 குடும்பங்கள் பயனடைந்துள்ளன. 2011-12ல் 4,98,62,775 குடும்பங்கள் பயனடைந்துள்ளன. நடப்பு நிதியாண்டில் (ஜனவரி 2013 நிலவரப்படி) 4,24,77,807 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது.

இத்திட்டம் எப்படி செயல்படுகிறது?:

இந்தத் திட்டத்தின் நிதி, தவறாக பயன்படுத்தப் படுவதாகவும், ஊழல் நடப்பதாகவும் புகார்கள் வருகின்றன. இத் திட்டத்தின் செயல்பாடுகளை, உரிய கால இடைவெளியில், தணிக்கை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. நவீன தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம், இந்தத் தவறுகளைக் களைய முடியும்.  

இத்திட்டத்தின்கீழ் வேலை செய்பவர்களுக்கு முழு ஊதியமும் வழங்கப்படவில்லை என்றும், தினமும் ரூ.70 முதல் 80 வரையில்தான் ஊதியம் வழங்கப் படுகிறதென்றும் சில கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். ‘பயனாளிகள் சரியாக பணிகளைச் செய்வதில்லை. வேலை செய்வதில் ஏமாற்றுகின்றனர். ஆதலால், செய்த வேலைக்கேற்ப ஊதியம் வழங்குகிறோம்’ என்கிறது பஞ்சாயத்து தரப்பு. நூறு நாள் வேலைத் திட்டத்தினால் கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளைச் செய்வதற்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகள் இருந்த போதிலும்கூட, கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் மக்களின் குறைந்தபட்ச வருவாய்க்கு உத்தரவாதம் செய்வதிலும், கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்வதைத் தடுப்பதிலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதே இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதாக உள்ளது.

ஆர்டிஐ பயிற்சி ஆன்லைனில் இலவசம்!




தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த இலவசப் பயிற்சியை ஆன்லைன் வழியாக வழங்குகிறது மத்திய அரசு

கவல் அறியும் உரிமைச் சட்டத்தை அனைத்து மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில்,  மத்திய அரசு, ஆன்லைனில் அந்தச் சட்டம் குறித்த சான்றிதழ் பயிற்சிகளை இலவசமாக வழங்குகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) ம்2005ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் அரசுடைய செயல்பாடுகளைப் பற்றியும், அரசு அதிகாரிகளின் அலுவல் பற்றிய தகவல்களையும், இச்சட்டத்தைப் பயன்படுத்தி  பெற்றுக் கொள்ளலாம். மேலும் அரசின் சில துறைகளில் மட்டும் இச்சட்டத்தைப் பயன்படுத்த  சில வரம்புகளும் விதிவிலக்கும் உள்ளன.

இந்த இலவச ஆன்லைன் பயிற்சி, 7 நாட்கள் மற்றும் 15 நாட்கள் என  இரண்டு வகைகள் உள்ளன. 7 நாட்கள் கொண்ட பயிற்சியில் மொத்தம் 7 பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 கேள்விகள் கேட்கப்படும். அந்தக் கேள்விகளில் 3 கேள்விகளுக்கு சரியான விடையை அளித்தால் மட்டுமே அடுத்த பிரிவிற்குச் செல்ல முடியும். மேலும், இந்த 7 நாட்கள் கொண்ட பயிற்சியில் வெற்றி பெற்றால் மட்டுமே, 15 நாட்கள் கொண்ட பயிற்சியில் சேர முடியும்.

இந்தப் பயிற்சியில் சேர்வதற்காக சில தகுதிகள் இருக்கின்றன. பயிற்சியில் சேரும் ஆண்/பெண் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். இந்தப் பயிற்சியின் முடிவில் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால், அதனைப் படித்து புரிந்துகொள்ளும் அளவு, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

தகவல் உரிமைச் சட்டத்தின் இலவச ஆன்லைன் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், அதனுடைய தளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர், பதிவு செய்தவர்களுக்கென கடவுச்சொல் (password)  மற்றும் பயனாளர் ஐ.டி. (user id) குறித்த தகவல்கள் மெயிலில் தெரிவிக்கப்படும். அந்த விவரங்களைக் கொண்டு ஆன்லைன் பயிற்சித் தளத்தில் நுழைந்தால், பயிற்சியை தொடங்கலாம்.

மேலும் இந்தப் பயிற்சியைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று பார்க்கலாம். http://rtiocc.cgg.gov.in

செஞ்சிலுவை சங்கம்


போர் நடந்தாலும், இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் நிகழ்ந்தாலும் அங்குள்ள மக்களோடு இணைந்து பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவச் சேவையாற்றும் சர்வதேச அமைப்பான  செஞ்சிலுவை சங்கத்துக்கு 150 வயது ஆகிறது.

விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் பிறந்தவர் ழான் ஹென்றி டூனன்ட். பிரான்சின் ஆளுகைக்குட்பட்டிருந்த அல்ஜீரிய நாட்டில் வணிகம் செய்வதற்கு அனுமதி வேண்டி, இத்தாலி வழியாக பிரான்ஸ் மன்னர் மூன்றாம் நெப்போலியனை சந்திக்க சென்றார் ஹென்றி டூனன்ட். 1859-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி வடக்கு இத்தாலியிலுள்ள சோல்பெரினோ என்ற இடத்தில்,  பிரான்ஸ் மற்றும் சார்டீனீயாவின் கூட்டுப் படைகளுக்கும், அப்பகுதியைக் கைப்பற்றியிருந்த ஆஸ்திரியப் படைகளுக்கும் இடையே கடும் போர் மூண்டது. ஒரு நாளில் நடைபெற்ற அப்போரில் சுமார் 15 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர். 25 வீரர்கள் படுகாயமடைந்தனர். இப்போரின் கொடூரத்தைக் கண்ட ஹென்றி, தான் வந்த நோக்கத்தை மறந்து, போரில் காயம்பட்ட வீரர்களுக்கு அப்பகுதி மக்களைக் கொண்டே சிகிச்சைகளை அளித்தார். சில மாதங்களுக்குப் பிறகு தனது நாட்டிற்குத் திரும்பினர்.

இந்தப் போரினால் ஏற்பட்ட கொடூரங்களை மையமாக வைத்து ‘சோல்பெரினோவின் நினைவுகள்’ என்ற புத்தகத்தை எழுதி, தனது சொந்தச் செலவில் அச்சடித்து, 1862-ல், ஐரோப்பா முழுவதும் இருந்த அரசர்கள், அரசியல் தலைவர்கள், படைத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். அப்புத்தகத்தில் போரினால் வீரர்களுக்கு ஏற்படும் ஊனத்தையும், காயத்தையும் சரி செய்ய தேசிய அளவிலான மருத்துவக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், அம்மருத்துவக்குழு போரில் ஈடுபட்டு காயமுற்ற அனைத்துப் பிரிவினருக்கும் வேறுபாடின்றி மருத்துவம் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். அதைப்படித்த அனைவரும் ஹென்றி டூனன்ட்டின் கருத்தினை ஆதரித்தனர்.

1863-ஆம் ஆண்டு, பிப்ரவரி 9-ஆம் தேதி, ஜெனீவாவில் ஐவர் கொண்ட குழுவை ஹென்றி டூனன்ட் அமைத்தார். இந்தக் குழுவிற்குக் ‘ஜெனீவா சோஸைட்டி ஃபார் பப்ளிக் வெல்ஃபேர்’ (Geneva Society for Public Welfare)  என்று பெயரிடப்பட்டது. இக் குழுவின் தலைவர் குஸ்டவ் மொனிர்.  ஹென்றி டூனன்ட் உள்ளிட்ட நால்வர் இக்குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த குழு அமைக்கப்பட்டு எட்டு நாள்கள் கழித்து, ‘இன்டர்நேஷனல் கமிட்டி ஃபார் ரிலீப் டு தி வவுண்டட்’ என பெயர் மாற்றப்பட்டது.

ஹென்றி டூனன்ட் வலியுறுத்திய மருத்துவ சேவை ஆற்றக்கூடிய சர்வதேச அமைப்பு ஒன்றை நிறுவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அதற்கேற்றபடி செயல்படுவதே இக்குழுவின் நோக்கம். போர் நடைபெறும் இடங்களில் மருத்துவச் சேவை ஆற்றுவது குறித்த சர்வதேச மாநாடு ஜெனீவாவில்  1863-ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது. பிரான்ஸ், பிரிட்டன், நெதர்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு தேசிய அளவில் ஒரு அமைப்பு ஏற்படுத்துவது, போரினால் பாதிக்கப்பட்ட வீரர்களை பாரபட்சமின்றி பாதுகாப்பது, தன்னார்வத்துடன் வரும் பொதுமக்களைக் கொண்டு போரில் காயம்பட்டவர்களுக்கு சேவை செய்வது உள்ளிட்ட  பாரபட்சமின்றி  உதவி செய்யும் இந்த அமைப்பினைப் பாதுகாக்க, தனி அடையாளத்தை (செஞ்சிலுவைச் சின்னம்) உருவாக்குவது போன்ற தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

1864-ஆம் ஆண்டில் ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில், இதற்கென சர்வதேச அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பிரகடனத்தில் பல நாடுகள் கையெழுத்திட்டன.

இம்மாநாட்டின் முடிவில் இந்த அமைப்பிற்கான சின்னமும் உருவாக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. ஹென்றி டூனன்ட் பிறந்த ஸ்விட்சர்லாந்து நாட்டின் கொடி அமைப்பை ஒட்டியே இச்சின்னமும் உருவாக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. இக்கொடியில் கூட்டல்குறி வெண்மை நிறத்திலும், இதன் பின்னணி நிறம் சிவப்பிலும் அமைந்திருக்கும். இதன் நிறங்களை மட்டும் மாற்றி, வெள்ளை நிறப்பின்னணியில் சிவப்பு நிறக் கூட்டல் குறியில் அமைந்த சிலுவைச் சின்னம் உருவாக்கப்பட்டது.

பல்வேறு சர்வதேசக் கூட்டங்களுக்குப் பிறகு இந்த அமைப்பினை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டன. 1876-ல் இந்தக் குழுவின் பெயர், ‘சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்’ (International Committee of the Red Cross - ICRC) என மாற்றம் பெற்றது.

மொழி, நிறம், இனம், நாடு என எந்தவித பாரபட்சமுமின்றி மனிதாபிமானத்தோடு உதவி, ஒத்தாசை புரிய வேண்டும் எனும் ஆவலினால் உந்தப்பட்டு, எங்கெல்லாம் மனிதருக்கு துன்பம் நேர்கிறதோ, அங்கெல்லாம் நேரில் சென்று பணிபுரிய, பாதிப்புகளைத் தடுக்க அல்லது அவற்றின் பரிமாணத்தைக் குறைக்க தேசிய, சர்வதேச அளவில் செஞ்சிலுவை இயக்கம் பாடுபட்டு வருகிறது. உயிர், உடல், நலம் என்பவற்றைப் பாதுகாப்பதும், மனித கௌரவம் பேணப்படுவதை உறுதி செய்வதுமே இச்சங்கத்தின் பிரதான நோக்கமாகும். உலக மக்களின் மத்தியில் புரிந்துணர்வை வளர்த்து நட்புறவு, கூட்டுறவு என்பவற்றை நிலைபெறச் செய்து நிரந்தர சமாதானத்தைக் கட்டி எழுப்புவது அதன் குறிக்கோள்களாகும். மனிதநேயம், பாரபட்சமின்மை நடுநிலைமை தொண்டர் சேவை, ஒருமைப்பாடு, சுயாதீனம், சர்வதேச மயம் என்ற ஏழு முக்கியக் கொள்கைகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்படும் சேவைகளை உணர்ந்த இஸ்லாமிய நாடுகள் விடுத்த வேண்டுகோளின்படி, 1876 -ஆம் ஆண்டில் இதே சேவையின் அடிப்படையில் செம்பிறையை அடையாளச் சின்னமாகக் கொண்ட சங்கம் உருவாக்கப்பட்டது. உலகின் ஏனைய நாடுகளில் செஞ்சிலுவைச் சங்கம் செய்து வரும் சேவையை இஸ்லாமிய நாடுகளில் செம்பிறை என்ற சின்னத்தின்கீழ் இயங்கும் சங்கமும் செய்து வருகிறது.

 1870-களுக்குப் பிறகு போர் நடக்கும்  இடங்களுக்கு மாட்டு வண்டி, குதிரை வண்டி என எப்படியெல்லாம் அங்கு செல்ல முடியுமோ, அப்படிச் சென்று சேவையாற்றியது. மேலும், முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது இச்சங்கம் ஏராளமான  மனித உயிர்களைக் காப்பாற்றியது.

ஜெனீவா உடன்படிக்கையில் செஞ்சிலுவைச் சின்னத்தை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. இதனை ஒரு பாதுகாப்பு அடையாளமாக செஞ்சிலுவைச் சங்கத்தினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். யாரும் இந்தச் சின்னத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கான விதிமுறைகளை 1949 -ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஜெனீவா உடன்படிக்கையில் ஏற்படுத்தப்பட்டன.  போர்களின் போது மட்டுமே செஞ்சிலுவை அடையாளத்தை ராணுவ சிகிச்சைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சீருடையில் பயன்படுத்தலாம். மருத்துவமனைகளிலும் சிகிச்சைப் பிரிவுகளிலும் இதனைப் பயன்படுத்த அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

முதலாம் உலகப் போர் முடிந்த பிறகு 1920- ஆம் ஆண்டு, ஜூன் 7 ஆம் தேதி, 50 உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியாவில் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராக சர் வில்லியம் மால்கம் ஹெலி செயல்பட்டார். இந்தியப் பள்ளிகளில் இளஞ்சிறார் செஞ்சிலுவைச் சங்கமும் (Junior Redcross), கல்லூரிகளில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கமும் (Youth Red cross) செயல்பட்டு வருகின்றன. குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோதும், இந்திய கடற்கரைப்பகுதிகளை சுனாமி தாக்கிய போதும் செஞ்சிலுவைச் சங்கம் மகத்தான சேவைகளைச் செய்தது. இதுபோல் ஒவ்வொரு நாட்டிலும்  செஞ்சிலுவைச் சங்கம் செய்து வரும் பணிகள் அளப்பரியவை.


அமைதிப் பணிக்கு நோபல் பரிசு
சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பது ஓர் ஆயுதப் போரின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சட்ட விதிமுறைகள் ஆகும். இவை போர்ச் சட்டங்கள் என்றும் அறியப்படுகின்றன. இந்தச் சட்டங்கள் சண்டையில் ஈடுபட்டிருக்கும் நாடுகள், நடுநிலை நாடுகள், மற்றும் தனிநபர்கள் ஆகியோரது நடத்தைகளையும் பொறுப்புகளையும் வரையறை செய்கின்றன. பொதுமக்களை தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். இச்சட்டம் உருவாவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்தை உருவாக்கிய ஹென்றி டூனன்ட் முக்கியக் காரணியாக இருந்தார். 1901-ல் முதல் முதலாக வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் டூனன்ட்.

Sunday, 3 March 2013

கேள்விகள்


1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?

2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?

3) கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?

4) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

5) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?

6) குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?

7) ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?

8) நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?

9) தமிழ் நாட்டின் மலர் எது ?

10) திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?


பதில்கள்:

1. டி பி ராய்.

2. ஜான் சுல்லிவன்.

3. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.

4. டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.

5. தமிழ்நாடு.

6. மெர்குரி

7. ரோமர்

8. டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

9. செங்காந்தள் மலர்

10. சென்னிமலை

மகளிர் தினம் எப்படி வந்தது?


பதினெட்டாம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். மகளிரோ வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். ஆரம்ப கல்வி கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டது. மருத்துவமும், சுதந்திரமும் என்னவென்றே கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம். இப்படிப்பட்ட நிலையில், 1857ம் ஆண்டு நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்து வீட்டில் முடங்கினர். இதனால், பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் முதல் முறையாக மகளிருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் மகளிரால் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது. ஆண்களுக்கு நிகராக தங்களாலும் வேலை செய்ய முடியும் என்று மகளிர் சமுதாயமே அப்போதுதான் புரிந்து கொண்டது. இருந்தும், ஊதியத்தில் மகளிருக்கு அநீதி வழங்கப்பட்டது. இதனால், மகளிர் மனம் குமுறினர்.
இதையடுத்து, ஆண்களுக்கு இணையான ஊதியம் மற்றும் உரிமைகளை கோரி மகளிர் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அரசு செவிசாய்க்கவில்லை. கொதித்தெழுந்த அமெரிக்க மகளிர் 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தையும் அரசு அடக்கியது.

வெற்றி பெற்றதாக கொக்கரித்தது. ஆனால், அந்த பகல் கனவு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அடக்கி வைத்தால் அடங்கி போவது அடிமைத்தனம் என்று முழங்கியபடி 1907ம் ஆண்டு மகளிர் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். இந்த முறை அமெரிக்கா மட்டுமல்லாமல் ஜெர்மனி, ரஷ்யா, டென்மார்க், பாரிஸ் உட்பட பல நாடுகளில் மகளிர் போரட்டத்தில் குதித்தனர். இருந்தும் ஆண் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் எல்லா போராட்டங்களும் தோல்வியில் முடிந்தன.
1910ம் ஆண்டு டென்மார்க்கில் முதல்முறையாக பெண்கள் உரிமை மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் உலக நாட்டில் உள்ள மகளிர் அமைப்புகள் கலந்து கொண்டன. அப்போதுதான் மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

பல்வேறு தடங்கலால் இந்த தீர்மானம் நிறைவேற முடியாமல் போனது. இருந்தும் ஆங்காங்கே மகளிர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். சோவியத் ரஷ்யாவில் செயின்ட்பீட்டர்ஸ் நகரில் 1921ம் ஆண்டு மிகப் பெரிய அளவில் மகளிர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸசாண்ட்ரா கெலனரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். 1921ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி முதலாவது மகளிர் தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டது. 90 ஆண்டுகளாக மகளிர்தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.