அரசுப் பணிகளில் குரூப்-1 பதவிகளில் இருக்கும் காலி இடங்களில் தங்களுக்கு விருப்பமான பணிகளைத் தேர்வு செய்துகொள்ளும் முறையை முதன் முதலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பணிகளை ஒதுக்கீடு செய்ய இந்த முறை உதவும் என்கிறார்கள் இந்தப் புதிய முறை மூலம் வேலைவாய்ப்புப் பெற்றவர்கள்.
சப்-கலெக்டர், மாவட்டப் பதிவாளர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், வணிக வரித் துறை துணை ஆணையாளர், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர், தீத்தடுப்பு மற்றும் மீட்புத்துறை மண்டல அதிகாரி ஆகிய பணிகளில் உள்ள 131 காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியுடையவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்கள், விருப்பம், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக குரூப்-1 பணிகளுக்கு நியமனம் செய்வதற்கு கவுன்சலிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி. தேர்வு செய்யப் பட்டவர்கள் ரேங்க் பட்டியல் அடிப்படையில் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். அப்போது அவர்கள், இருக்கின்ற காலி இடங்களில் தங்களுக்கு விருப்பமான பணியை தேர்வு செய்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
“எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல், வெளிப்படையாகப் பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்காக குரூப்-1 தேர்விலும் கவுன்சலிங் முறையை அறிமுகப்படுத்துகிறோம். பழைய முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அவர்கள் விரும்பாத பதவியோ அல்லது அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பதவியோ ஒதுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், தற்போது கவுன்சலிங் மூலம் பணி நியமனம் நடைபெறுவதால் தங்களுக்கு விருப்பமான பதவியைத் தேர்வு செய்து திருப்தியாக பணியை மேற்கொள்ளலாம்” என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் மா. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
எழுத்துத் தேர்வில் தகுதி பெற்று, நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கவுன்சலிங் நடைபெற்றது. ரேங்க்படி அழைக்கப்பட்டவர்கள், தங்களது விருப்பப்படி பணிகளைத் தேர்வு செய்தனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் வழங்கினார்.
“பல கட்டங்களாக நடைபெற்ற தேர்வில், தகுதியுள்ளோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. குரூப் - 1 தேர்வுக்கு கவுன்சலிங் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதன்முறை. முற்றிலும் வெளிப்படையான முறையில் கவுன்சலிங் நடைபெற்றுள்ளது. இதன்படி, குரூப் - 1 தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு இந்தெந்தப் பணிகளில் பணிபுரிய வாய்ப்புள்ளது என்று கூறுவோம். தாங்கள் விரும்பும் பணியை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில் 56 பேர் உதவி கலெக்டர்களாகப் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டவர்கள், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அயராது பாடுபடவேண்டும்” என்று அவர் வாழ்த்தினார்.
680க்கு 451 மதிப்பெண்கள் பெற்று ரேங்க் பட்டியலில் முதலிடம் பெற்ற திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகாம்பட்டி புதூரைச் சேர்ந்த எஸ். மதுராந்தகி, “கவுன்சலிங்கில் எனக்குப் பிடித்த சப்-கலெக்டர் பணியைத் தேர்ந்தெடுத்தேன்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.
“தற்போது நாம் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் கவுன்சலிங் முறையில் பணி நியமனம் நடைபெறுவதால், எனக்குப் பிடித்த சப்-கலெக்டர் பணியே கிடைத்துள்ளது” என்கிறார், நான்காம் இடம் பெற்றுள்ள சுபா நந்தினி.
“கவுன்சலிங் நடைபெற்றபோது என்னென்ன பணிகளில் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது பற்றிய தகவல்கள் புரஜக்டரில் காட்டப்பட்டன. நான் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், எந்தந்தெந்தப் பணிகளில் சேரலாம் என்பதைத் தெரிவித்தார்கள். இதில் எனக்குப் பிடித்த மாவட்டப் பதிவாளர் பணியைத் தேர்ந்தெடுத்தேன்” என்கிறார், விழுப்புரத்தைச் சேர்ந்த கமலாதேவி. இவர், பி.இ. பட்டதாரி. சென்னையில் தங்கியிருந்து குரூப் – 1 தேர்வுக்குத் தயாராகி வந்தார். இவரது தந்தையார், சத்துணவுப் பொறுப்பாளராகப் பணியாற்றுகிறார். தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்ததாகக் கூறுகிறார்.
“கவுன்சலிங் முறையில் பணி நியமன ஆணை வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. முன்பெல்லாம், இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து ஒரு கடிதம் மட்டுமே அனுப்புவார்கள். தற்போது டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கே நேரில் அழைத்து, புரஜெக்டரில் பணிகளின் நிலவரத்தை அறிந்துகொள்ளும்படிச் செய்திருக்கிறார்கள். நாம் பெற்றுள்ள மதிப்பெண்களுக்கேற்ப, நமக்கு உரிய பணிகள் இவையிவை என்று சொல்கிறார்கள். அதிலிருந்து நமது விருப்பம்போலப் பணிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில், கவுன்சலிங் மிகவும் வெளிப்படையாக இருந்தது” என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த முத்து மீனாட்சி.
குரூப் - 1 தேர்வில் 398.50 மதிப்பெண்கள் பெற்று, சப்-கலெக்டராகப் பணி ஆணை பெற்றிருக்கிறார் இவர். எம்.சி.ஏ., எம்.பில் பட்டதாரியான இவர், இதற்கு முன்பே குரூப் -1 தேர்வு எழுதி தற்போது, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். நிர்வாகப் பணியில் வேலைவாய்ப்புப் பெற வேண்டும் என்ற லட்சியத்தால், மீண்டும் இத்தேர்வு எழுதி, தற்போது சப்-கலெக்டராகி இருக்கிறார்.
நன்றி: புதிய தலைமுறை
No comments:
Post a Comment