Thursday, 27 December 2012

சோதனையில் புலப்படும் சாதனைகள்!


அந்த இளைஞனுக்கு வித்தியாசமாய் கார்ட்டூன்கள் வரையும் திறமை இருந்தது. ஆனால் அவன் பல பிரபல பத்திரிக்கைகளில் கார்ட்டூனிஸ்டாக வேலைக்குச் செல்ல முயற்சி செய்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை.
அவர்கள் அவனுக்கு சரியாக வரையத் தெரியவில்லை என்ற காரணம் கூறி வேலை தர மறுத்து விட்டார்கள். அவன் ஆம்புலன்ஸ் டிரைவராக சில காலம் வேலை பார்த்தான். அவன் சகோதரன் சிபாரிசின் பேரில் இடை இடையே விளம்பரங்களுக்கு சில ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைச் செய்து கிடைத்த சொற்ப சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தி வந்தான் அந்த இளைஞன்.
ஒரு முறை ஒரு சர்ச் பாதிரியார் சில ஓவியங்கள் வரைந்து தரும் வேலையை அவனுக்குத் தந்தார். வரைய சர்ச் அருகில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தை அவனுக்கு ஒதுக்கித் தந்தார் அந்த பாதிரியார்.
அந்தக் கட்டிடத்தில் எலிகளின் தொந்திரவு மிக அதிகமாக இருந்தது. வரைய அந்த இடம் சாதகமாக இல்லை. அங்கு ஒரு சுண்டெலியின் அட்டகாசமோ அதிகமாக இருந்தது.
அந்த மோசமான சூழ்நிலையிலும் அந்த சுண்டெலியால் கவரப்பட்ட இளைஞன் அந்த சுண்டெலியை ஒரு இறவாத கதாபாத்திரமாகப் பின்னாளில் படைத்து விட்டான்.
அந்த இளைஞனின் பெயர் வால்ட் டிஸ்னி. அவன் படைத்த பாத்திரம் மிக்கி மவுஸ். பல கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை வால்ட் டிஸ்னிக்கு சம்பாதித்துத் தந்தது அந்த மிக்கி மவுஸ்.
இன்னொரு உதாரணமாக ஒரு அமெரிக்க முதியவரைப் பார்ப்போம். அறுபது வயதில் இருந்த வேலை போய், சேர்த்த செல்வமும் பெரிதாக எதுவும் இல்லாமல் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாக நின்றார் அவர்.
சிறிய வயதில் இருந்தே அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம். தந்தை அவருடைய சிறு வயதிலேயே இறந்து விட அம்மா வேலைக்குப் போக வேண்டி வந்தது. எனவே சிறுவனாக இருக்கும் போதே அம்மா வேலைக்குப் போகும் போது மற்ற சகோதர சகோதரிகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது. அம்மா வீட்டில் இருக்கையிலும் சமையலில் தாயிற்கு உதவும் வேலையும் இருந்தது.
அம்மாவிற்கு உதவியதால் சமையல் அவருக்கு நன்றாக வந்தது. எனவே ஓட்டல்களில் சமையல்காரராக வேலை செய்து தன் வாழ்க்கையை நடத்தினார்.
பின் ஒரு சிறிய நகரத்தில் சிறிய ஓட்டல்கடையை நடத்தினார். அவர் தாயாரின் கைப்பக்குவத்தில் அவர் கற்றிருந்த சிக்கன் வருவல் வாடிக்கையாளர்களிடம் மிக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஒரு கட்டத்தில் அந்த நகரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக அவர் அந்தக் கடையையும் மூட வேண்டி வந்தது.
அப்போது அவருக்கு வயது அறுபதைத் தாண்டி இருந்தது. வயதானவர்களுக்கு அரசாங்கம் தரும் பாதுகாப்பு தொகை 100 அமெரிக்க டாலர்களில் வாழ்க்கை நடத்த முடியாமல் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.
அவருக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த சிக்கன் வருவலை அமெரிக்க ஓட்டல்களுக்கு விற்க அவர் தீர்மானித்தார்.
நாடெங்கும் பயணித்து பெரிய ஓட்டல்களுக்குச் சென்று அங்கேயே சிக்கன் வருவலைத் தயாரித்து சுவைக்கத் தந்து பார்த்தார். ஆனால் அந்த ஓட்டல்கள் அவருடைய சிக்கன் வருவலில் ஆர்வம் காட்டவில்லை. ஒன்றல்ல இரண்டல்ல 1008 ஓட்டல்கள் நிராகரித்தன. கடைசியில் 1009 ஆவது ஓட்டல்காரர் பீட் ஹார்மன் என்பவர் அதில் ஆர்வம் காட்டினார்.
அவருடன் கூட்டு சேர்ந்து “Kentucky Fried Chicken” என்ற தொழிலை 1952 ஆம் ஆண்டு உருவாக்கினார் அந்த முதியவர். அவர் பெயர் கர்னல் ஹார்லாண்ட் சாண்டர்ஸ்.
1960 ஆம் ஆண்டில் 600 க்கும் மேற்பட்ட கிளைகள் உருவாகி அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசூலில் பெரும் சாதனை படைத்தது அவருடைய சில்லி வருவல்.
1964 ல் தன் நிறுவனத்தை இருபது லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்றார் கர்னல் சாண்டர்ஸ். கடைசி வரை பெரும் செல்வந்தராகவே வாழ்ந்த அவர் 1976 ல் உலகத்தின் பிரபலஸ்தர்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார்.
சோதனைகளைக் கடக்காமல் சாதனைகள் இல்லை. வெற்றியின் அளவு பெரிதாகப் பெரிதாக சோதனைகளின் அளவும் பெரிதாகவே இருந்திருக்கின்றன. இன்று நம்மை பிரமிக்க வைக்கும் அத்தனை வெற்றியாளர்களும் இப்படி பல சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைத்தவர்களே.
வெற்றிக்குத் திறமைகள் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. மேலே சொன்ன உதாரணங்களில் வால்ட் டிஸ்னியும், கர்னல் சாண்டர்ஸும் தங்கள் வெற்றிக்கான திறமைகளை ஆரம்பத்திலேயே பெற்றிருந்தார்கள்.
ஆனால் உலகம் அவர்களை அங்கீகரிக்க நிறையவே காலம் எடுத்துக் கொண்டது. அது வரை அவர்கள் கண்டது சோதனைக் காலங்களே. அந்தக் காலத்தில் அவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் போயிருந்தால் வரலாற்றில் அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருப்பார்கள்.
சோதனைக்காலங்களே இல்லாமல் போயிருந்தாலும் அவர்கள் இப்படி முத்திரை பதிக்குமளவு சரித்திரம் படைத்திருக்க மாட்டார்கள்.
வால்ட் டிஸ்னிக்கு ஆரம்பத்திலேயே ஒரு பிரபல பத்திரிக்கை கார்ட்டூனிஸ்டாக வாய்ப்பு கொடுத்திருந்தால் அவர் ஒரு நல்ல வருவாயுடன் பாதுகாப்பாக வாழ்க்கை வாழ்ந்து கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவராக இருந்திருக்கலாமே ஒழிய கோடிக்கணக்கான செல்வம் படைத்து புகழையும் பெற்றிருக்க முடியாது.
கர்னல் சாண்டர்ஸ் அந்த சிறிய நகரத்தில் நடத்தி வந்த ஓட்டல் கடையை மூட நேர்ந்திரா விட்டால் ஓரளவு வசதியான சம்பாத்தியம் செய்து நடுத்தர வாழ்க்கையை ஓட்டியிருக்கலாமே ஒழிய இத்தனை செல்வத்தையும், புகழையும் அடைந்திருக்க முடியாது.
உண்மையில் சோதனைக் காலங்கள் அர்த்தம் மிகுந்தவை. அந்தக் காலத்தில் தான் உண்மையில் ஒருவன் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறான். அந்தக் காலத்தில் தான் விதி அவனுக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. சோதனைக் காலங்களின் பாடங்கள் இல்லாமல் யாருமே வெற்றிக்கான பக்குவத்தைப் பெற்று விடுவதில்லை. எனவே மாபெரும் வெற்றியை விரும்புபவர் எவரும் சோதனைக் காலத்தில் சோர்ந்து விடக்கூடாது.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவருக்கு
என்று வள்ளுவர் கூறுவது போல் நெருப்பிலே இட்டு சுடச்சுடத் தான் தங்கம் மின்னும். மனிதனும் சோதனைகள் மூலமாகவே சாதனைகளுக்கான வழியைக் கற்றுக் கொள்கிறான். சோதனைக் காலத்தில் சோர்ந்து விட்டால் அந்தக் காலம் காட்டும் புதுப் பாதைகள் நம் கண்ணில் படாமலேயே இருந்து விடக்கூடும்.
விதி சோதிக்கும் போது பெரிய வெற்றிக்கு இந்த மனிதன் ஏற்றவன் தானா என்று கூர்ந்து கவனிக்கிறது. புலம்புவதும், குற்றம் சாட்டுவதுமாகவே அவன் இருந்து விடுகிறானா இல்லை தாக்குப் பிடிக்கிறானா என்றும் கவனிக்கிறது.
தாக்குப் பிடித்து மனிதன் தன் தகுதியை நிரூபிக்கும் போது பிறகு விதி அவனுக்கு வழி மட்டும் காட்டுவதில்லை. பின்னர் அவனிடம் மிகவும் தாராளமாகவே நடந்து கொள்கிறது. அவன் எதிர்பார்த்ததற்கும் பல மடங்கு அதிகமாகவே அவனுக்கு வெற்றியைத் தந்து அவனைக் கௌரவிக்கிறது.
எனவே சோதனைகள் வரும் போது இதை நினைவில் கொள்ளுங்கள். தாக்குப் பிடியுங்கள். பாடம் படியுங்கள். பக்குவம் அடையுங்கள். ஒரு கட்டத்தில் எங்கோ ஒரு கதவு கண்டிப்பாகத் திறக்கும். அதன் வழியாகப் பயணித்து சோதனையைக் கடந்து சாதனை படையுங்கள்.
நன்றி: தன்னம்பிக்கை
 

Wednesday, 5 December 2012

காத்திருக்க வேண்டியதில்லை

அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய, புதுப்பிக்க இப்போது நீங்கள் கால்கடுக்க காத்திருக்கவேண்டியதில்லை. தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் இணையதளத்தின் மூலமே உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இயலும். இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in


ஆன்லைனில் பதிவு செய்யும் முறை :
1.  ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?
இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.
2. கூடுதல் பதிவு செய்வது எப்படி ?
ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.
3. ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா ?
ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.
4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா ? என்பதை எப்படி அறிவது ?
தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்
5. ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா ?
ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்
6. ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை (priority certificate) பதிய இயலுமா ?  
முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.
7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார் ?
இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.
8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை ?
நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.

Thursday, 29 November 2012

முயற்சியே மூச்சு!


கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், இயேசு
கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர் (469 BC–399 BC). அவர் வாழ்ந்த
காலத்தில், ஒரு நாள், ஒரு இளைஞன் வந்து அவரை சந்தித்தான். வெற்றியின்
ரகசியத்தைத் தனக்கு சுருக்கமாகச் சொல்லித்தருமாறு வேண்டிக்கொண்டான்.

அடுத்த நாள் காலை, ஊருக்கு அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு வந்து தன்னை சந்திக்கச் சொல்லி, அப்போதைக்கு அவனை அனுப்பிவைத்தார் அவர். அவனும் மறு பேச்சின்றி சென்று விட்டான்.

அடுத்த நாள் காலை. ஆற்றங்கரைக்கு வந்து அவரைச் சந்தித்தான் அவன். தன்னுடன் சேர்ந்து நடக்குமாறு அவனைப் பணித்துவிட்டு, அவர் ஆற்றுத் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவனும் நடந்தான்.

மார்பளவு நீருள்ள பகுதிக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள்.அப்போதுதான் அது நடந்தது. சற்றும் எதிர்பார்க்காத வகையில், அந்த இளைஞனைத் தன் இருகரங்களாலும் பிடித்த சாக்ரடீஸ், தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தண்ணீருக்குள் அமுக்கிப் பிடித்துக் கொண்டார்.

ஒன்றும் புரியாத இளைஞன், அவர் பிடியில்
இருந்தும், நீருக்குள் இருந்தும் விடுபட முயன்றான். முடியவில்லை. ஒரு
நிமிட மரணப் போராட்டத்திற்குப் பிறகு, தன்னை விடுவித்துக் கொண்டு மேலே
வந்தான். முகம் சிவந்துவிட்டது. மூச்சுத் திணறியதால், வேக வேகமாகக் காற்றை
உள்ளிழுத்து சுவாசிக்கத் தொடங்கினான். ஐந்து நிமிடங்களுக்குப்
பிறகுதான் தன்நிலைக்கு வந்தான்.

சாக்ரடீசின்மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்ததால், அமைதியாகக் கேட்டான் “ஐயா, ஏன் இப்படிச் செய்தீர்கள்?”

“செய்ததைவிடு! தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்போது
உனக்கு மிக அத்யாவசியமாகத் தேவைப்பட்டது எது? - அதைச் சொல் முதலில்!” என்று பதிலுக்கு அவனைக் கேட்டார் சாக்ரடீஸ்.

“காற்று. சுவாசிப்பதற்கான காற்று!”

“வெற்றியின் ரகசியமும் அதுதான். மோசமான நிலையில் ஒன்று
தேவைப்படும் நிலையில், போராடி, அதைப் பெற்றாய் இல்லையா நீ? வெற்றியும்
அதுபோலத்தான் கிடைக்கும். வெற்றிக்கு வேறு ரகசியம் ஒன்றும் இல்லை!

மூச்சு விடுபவன் மனிதன் அல்ல, முயற்சி செய்பவனே மனிதன்

Tuesday, 20 November 2012

செல்போனுக்குத் தடை!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் 'தேர்வு மையங்களுக்கு செல்போன், பேஜர் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளது.

மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கையும், தொடர்ந்து போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள தடையும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Sunday, 18 November 2012

அட்மிஷன் நடைபெறுகிறது!

டிசம்பர் மாத இறுதியில் நடைபெற இருக்கும் தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுகளுக்கு கோயம்புத்தூர் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் சிறப்பான முறையில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. மாலை நேர வகுப்புகள் / வார இறுதி வகுப்புகள் / மாதிரி தேர்வுகள் என நீங்கள் விரும்பும் வகுப்புகளைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்துடன், அனுபவம் மிக்க ஆசிரியர்களைக் கொண்டு, இனிய சூழலில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலதிக விபரங்களுக்கும், இலவச ஆலோசனைகளுக்கும் அழையுங்கள்: 9489222761

Wednesday, 14 November 2012

டிசம்பர் 30ம் தேதி குரூப் 1 தேர்வுகள்!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுகள் வருகிற டிசம்பர் மாதம் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வுகளுக்கு மிகச்சிறப்பான முறையில் கோயம்புத்தூர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தினசரி வகுப்புகள் / வார இறுதி நாட்கள் வகுப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது. இலவச ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அழையுங்கள் 9489222761

Friday, 9 November 2012

திட்டம் தவறலாம்... திட்டமிட தவறலாமா?!



ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு
முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டு விடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே!
மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த
சட்டத்தை யாராலு
ம் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின்
தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக்
கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது. மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச்
செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?'' ''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!'' ''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?'' ''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப்
போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா?

ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள்
சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த
4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக
திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!

Thursday, 1 November 2012

குரூப் -2 தேர்வுகள் - நவம்பர் 4ஆம் தேதி

நகராட்சி கமிஷனர், உதவி பிரிவு அலுவலர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 3, 631 பணியிடங்களுக்கு, குரூப் 2 தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது.

மொத்தம் 6.40 லட்சம் பேர் பங்கேற்றனர். இத்தேர்விற்கான வினாத்தாள்கள் ஒரு தேர்வு மையத்தில் வெளியானதாக பரபரப்பு கிளம்பியது. வினாத்தாள் வெளியானதால், இந்த தேர்வினை, டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்தது.

இந்நிலையில் இத்தேர்வுகளுக்காக புதிய வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன்படி நவம்பர் 4ம்தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: வினாத்தாள் "அவுட்' ஆனதால், மீண்டும் அதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 6.40 லட்சம் பேருக்கு மட்டும், தேர்வு நடக்கிறது. இதில், புதிதாக விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதகூடாது. ஆகஸ்டு மாதம்  நடந்த தேர்விற்கு இணையதளத்தில் "டவுன்லோடு' செய்த, ஹால்டிக்கெட்டை பயன்படுத்தி, அதே தேர்வு மையங்களில், மீண்டும் தேர்வினை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிப்பது நிஜம்

நண்பர்களே,

நான் அருண். கோயம்புத்தூர்க்காரன். அரசுப் பணிகளுக்காக நடத்தபடும் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் உடையவன். ‘இயலாமை என்பது முயலாமை’ என்பதை உறுதியாக நம்புகிறவன்.

என்னுடைய துறை சார்ந்த அனுபவத்தில் நான் கற்றவையும், பெற்றவையும் உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்த வலைப்பூ.

இந்தப் பக்கங்களில் பகிரப்படும் தகவல்களும், ஆலோசனைகளும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு பெரிதும் உதவும்.

வாருங்கள் நண்பர்களே... ஜெயித்துக் காட்டுவோம்!

மிக்க அன்புடன்,
அருண்.